(Source: ECI/ABP News/ABP Majha)
Harbhajan Slapgate Row: அன்று நான் செய்தது தவறு... ஸ்ரீசாந்த் சம்பவம் தொடர்பாக மனம் திறந்த ஹர்பஜன் சிங்
சக வீரர் ஸ்ரீசாந்தை அறைந்தது தொடர்பாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மனம் திறந்துள்ளார்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் சக வீரரான ஹர்பஜன் சிங் அறைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முதல் ஐபிஎல் தொடரில் இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவே முதல் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற மிகப் பெரிய சர்ச்சையாக அமைந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங் ஒரு தனியார் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “அன்று நடைபெற்ற சம்பவம் மிகவும் தவறான ஒன்று. என்னுடைய தவறால் சக வீரர் ஒருவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் கிரிக்கெட் வாழ்வில் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால் அது ஒன்று தான். அதாவது நான் களத்தில் ஸ்ரீசாந்தை நடத்திய விதத்தை நிச்சயம் மாற்றி இருக்க வேண்டும். அன்று அந்த சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அதை தற்போது நினைத்தால் எனக்கு நன்றாக புரிய வந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஸ்ரீசாந்த், “இந்த பிரச்சினை எப்போதே முடிந்துவிட்டது. அப்போதே சச்சின் எங்கள் இருவரையும் அழைத்து இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்திருந்தார். அவர் எப்போது எனக்கு ஒரு மூத்த சகோதரரை போன்ற ஒருவர். இந்த சம்பவத்தின் போது அவர் பார்த்த விதம் வேறு. அவர் என்னிடம் பல முறை இந்த சம்பவத்திற்காக வருந்தியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்பு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஒரே அணியில் இடம்பெற்று இருந்தனர். இருவருக்கும் இடையே நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஸ்ரீசாந்த் பிக்பாஸ் சென்று இருந்த போதும் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு ஹர்பஜன் சிங் இச்சம்பவம் தொடர்பாக வெளிப்படையாக மனம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். ஸ்ரீசாந்த் அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கினார். இந்த இரு அணிகளுக்கும் இடையான போட்டியின் முடிவில் இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்