Happy Birthday Virat Kohli: விராட்டின் கிரிக்கெட் ரெக்கார்ட் தெரியும்! சொத்து மதிப்பு, வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ இங்கே!
பிசிசிஐ ஒப்பந்தத்தின்படி, “ஏ+” பிரிவின் கீழ் ஒரு வீரராக திகழும் விராட் கோலிக்கு ஆண்டுக்கு ரூபாய் 7 கோடி வழங்கப்படுகிறது.
‘கிங்’ கோலி என்று உலகம் முழுவதும் செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி, நவீன காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கோலி இன்ஸ்டாகிராமில் 260 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.
பணக்கார விளையாட்டு வீரர்:
கோலி இதுவரை ஒரு நாள் சர்வதேச (ODI) போட்டிகளில் 13,500 ரன்களுக்கு அதிகமாகவும், டெஸ்டில் 8,600 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். கோலி, தனது 48 ஒருநாள் சதங்களுடன், சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையான 49 சதங்களை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.
தகவலின்படி, கிரிக்கெட் வீரர் உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என கூறப்படுகிறது. கோலியின் முக்கிய வருவாய் கிரிக்கெட், சமூக ஊடகங்கள் மற்றும் பிராண்ட் பார்ட்னர்ஷிப் மூலம் கிடைக்கிறது.
பிசிசிஐ ஒப்பந்தத்தின்படி, “ஏ+” பிரிவின் கீழ் ஒரு வீரராக கோலிக்கு ஆண்டுக்கு ரூபாய் 7 கோடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூபாய்15 லட்சமும், ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கும் ரூ.6 லட்சமும், ஒவ்வொரு டி20 போட்டியில் விளையாடுவதற்கு ரூபாய்3 லட்சமும் மேட்ச் கட்டணமாக பெறுகிறார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியில் இடம்பிடித்ததற்காக அவர் ஆண்டுக்கு ரூபாய்15 கோடி பெறுகிறார்.
விராட் கோலியின் வணிக வருமானம்:
விராட் கோலி பல வணிகத்துறையில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஒரு உணவகத்தையும் வைத்திருக்கிறார். ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல், ஸ்போர்ட்ஸ் கான்வோ மற்றும் பிற ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, பல முன்னணி பிராண்டுகளுடன் ஒப்பந்தம் அமைத்து ரூபாய் 7.50 முதல் ரூபாய் 10 கோடி வரை பெறுகிறார் என்றும் தெரிகிறது.
கோலி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரு பதிவிற்கு முறையே கிட்டத்தட்ட ரூபாய் 11.5 கோடி மற்றும் ரூபாய் 2.5 கோடி பெறுகிறார். கிரிக்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து அவர் சம்பாதிப்பது மதிப்புக்குரியது என்றாலும், அவருக்கு மற்ற மதிப்புமிக்க சொத்துகளும் உள்ளன. குருகிராமில் சுமார் ரூபாய் 80 கோடியும், மும்பையில் ரூபாய் 34 கோடியும் மதிப்புள்ள குடியிருப்பு சொத்துக்களை அவர் வைத்திருக்கிறார். மேலும், இந்தியன் சூப்பர் லீக் கிளப் எஃப்சி கோவா, டென்னிஸ் கிளப் மற்றும் மல்யுத்தத்திலும் பங்குதாரராகவும் உள்ளார்.
ஐ.பி.எல். வருமானம்:
சுவாரஸ்யமாக, ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், கோலி இதுவரை எந்த ஐபிஎல் ஏலத்திலும் இடம்பெற்றதில்லை. 2008 இல் நடந்த போட்டியின் முதல் பதிப்பின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை வெறும் ரூபாய் 12 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று சீசன்களுக்கு ரூபாய் 2.4 கோடி சம்பளம் வாங்கினார். அப்போது அவர் உரிமையாளரால் தக்கவைக்கப்பட்ட ஒரே வீரராக ஆனார். 2011 மற்றும் 2014 க்கு இடையில், அவர் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 8.2 கோடி பெற்றார். 2013-ம் ஆண்டு அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், கோலி மொத்தம் ரூபாய் 12.5 கோடி சம்பாதித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன், பெங்களூர் அணி ரூபாய் 15 கோடிக்கு கோலியை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது.மேலும் அவர் 2023 சீசனுக்கும் அதே சம்பளத்தைப் பெறுகிறார்.