ரவிச்சந்திரன் அஷ்வின் - தாகூர்: 2021-ஆம் ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள்..
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டின் இறுதியில் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் பிடித்து நிறைவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி இன்று தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணிக்கு புதிய ஆண்டில் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடலாம்.
இந்நிலையில் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் யார் அதிகமாக விக்கெட் வீழ்த்தினர்? அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யார் யார்?
ஷர்துல் தாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு பிரிஸ்பேயினில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இவர் அசத்தினார். அதன் பின்னர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் கடந்த ஆண்டு 31 விக்கெட்கள் வீழ்த்தினார்.
முகமது சிராஜ்:
2020-21 ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களில் சிராஜூம் ஒருவர். இவரின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொள்ள தடுமாறினார். அதன்பின்பு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் இங்கிலாந்து தொடர் ஆகியவற்றில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். கடந்த ஆண்டில் இவர் 32 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பும்ரா:
இந்திய அணியின் மிகவும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். இவருடைய யார்க்கர் பந்துவீச்சு மற்றும் அசத்தலான வேகம் எதிரணியை கடந்த ஆண்டும் திக்குமுக்காட வைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 37 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அக்சர் பட்டேல்:
கடந்த இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த பந்துவீச்சாளர்களில் அக்சர் பட்டேலும் ஒருவர். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசினார். அறிமுக போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசினார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுக ஆண்டிலேயே இவர் 40 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின்:
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணி பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த இவரும் ஒரு முக்கியமான காரணம். கடந்த ஆண்டும் இந்திய அணிக்கு தன்னுடைய பந்துவீச்சின் மூலம் பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்தார். கடந்த ஆண்டு அஷ்வின் 63 விக்கெட் வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க: குதிரையை அழகாக கொஞ்சும் தோனி... வைரலாகும் புகைப்படம்... தெறிக்கவிடும் ரசிகர்கள்....!