Dhoni Wicket Keeping: தோனியின் கீப்பிங்கை குறை கூறிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்..! புள்ளிவிவரம் சொல்வது என்ன தெரியுமா..?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கீப்பிங் குறித்து குறை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர் தோனி. இந்தியாவிற்காக உலககோப்பையை வென்றுத் தந்த தோனி அதிரடி பேட்ஸ்மேன், பினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர் என்று பன்முகம் கொண்டவர். களத்தில் தோனியின் சாதுர்யம் பல முறை ரசிகர்களால் நேரிலே மைதானத்திலே ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியின் விக்கெட் கீப்பர் திறமை குறித்து விமர்சித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், கேப்டனுமாக இருந்தவர் ரஷீத் லத்தீப்.
ரஷீத் லத்தீப் அவருடைய சொந்த யூ டியூப் சேனலில் கூறியிருப்பதாவது, “கண்டிப்பாக தோனி மிகச்சிறந்த வீரர். ஆனால், புள்ளிவிவரங்களின் படி பார்த்தால் விக்கெட் கீப்பிங்கில் அவரது டிராப்பிங் ( தவறவிடுதல்) சதவீதம் 21 ஆக உள்ளது. இது மிகவும் பெரிய அளவு. ஆடம் கில்கிறிஸ்ட் 11 சதவீதம் மட்டுமே வைத்துள்ளார். மார்க் பவுச்சர் மிகச்சிறந்து விளங்குகிறார். ஆஸ்திரேலியாவின் டிம் பெய்ன் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தார். ஆனால், இறுதிகட்டத்தில் அவர் ஏராளமான கேட்சுகளை தவறவிட்டார். கடந்த 15 ஆண்டுகளில் குயின்டின் டி காக்தான் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தோனியின் விக்கெட் கீப்பிங் திறமைக்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கும்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான்கள் சங்ககரா, கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக தலைசிறந்த விக்கெட் கீப்பராக தோனி உள்ளார்.
தோனி 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடி மொத்தம் 350 போட்டிகளில் 444 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அவற்றில் 321 கேட்ச், 123 ஸ்டம்பிங் ஆகும். 100க்கும் மேற்பட்டோரை ஸ்டம்பிங் செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் உள்ள சங்ககரா 482 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அவற்றில் 383 கேட்ச்சுகளும், 99 ஸ்டம்பிங்கும் அடங்கும். இரண்டாவது இடத்தில் உள்ள கில்கிறிஸ்ட் 472 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அவற்றில் 417 கேட்ச்சுகளும், 55 ஸ்டம்பிகளும் அடங்கும். புள்ளிவிவரங்கள் தோனிக்கு சாதகமாகவே இருக்க பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமாகிய ரஷீத் தோனியை விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நெட்டிசன்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Jasprit Bumrah Ruled Out: ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு... பும்ரா விலகலா?-காரணம் என்ன?
மேலும் படிக்க : Ravi Shastri: கூகுள் சிஇஒ, ரிலையன்ஸ் தலைவருடன் கிரிக்கெட் மேட்ச் பார்த்த ரவிசாஸ்திரி.. வைரல் ட்வீட்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்