Rohit Sharma: டி20 உலகக்கோப்பையில் ஹிட் மேன் ரோகித் சர்மா படைக்கவுள்ள 5 சாதனைகள் லிஸ்ட் இதோ!
Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஐந்து சாதனைகளை படைக்கவுள்ளார்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஆவலாக காத்துக்கொண்டு இருப்பது, ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காகத்தான். இம்முறை 20 அணிகள் களமிறங்கியுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படியான நிலை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பைகளில் படைப்பதற்கு ஐந்து முக்கிய சாதனைகள் உள்ளது. அந்த சாதனைகள் என்னவென்று இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரர் என தன்னை நிலைநிறுத்தியுள்ள ரோகித் சர்மா, இதுவரை 151 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 190 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். இன்னும் 10 சிக்ஸர்கள் விளாசினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைக்கும் முதல் வீரராவார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள்:
நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்களில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் என்றால் அது இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் க்ளென் மேக்ஸ்வெல் என இருவரும் உள்ளனர். இருவரும் ஐந்து சதங்கள் விளாசி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். இந்நிலையில் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பை போட்டிகளில் சதங்கள் விளாசினால் முதல் இடத்தில் தனி ஆளாக ஜொலிப்பார்.
இரண்டு டி20 உலகக் கோப்பை பட்டங்களை வென்ற முதல் இந்திய வீரர்: 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றது மட்டும் இல்லாமல், இறுதிப் போட்டியில் 16 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 30 ரன்கள் சேர்த்திருந்தார். கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடிய ரோகித் சர்மா, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றினால் இரண்டாவது டி20 உலகக்கோப்பையை வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை எட்டிய முதல் கேப்டன்:
டி20 சர்வதேச போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறிப்பிடத்தக்கது, 54 டி20 போட்டிகளில் கேப்டனாக அணியை வழிநடத்தில் 41 வெற்றிகளுடன், டி20களில் அதிக வெற்றிகளைச் சந்தித்த எம்.எஸ் தோனிக்கு இணையாக ரோகித் சர்மாவும் உள்ளார். இன்னும் ஒரு வெற்றியின் மூலம், ரோஹித் ஷர்மா தோனியின் சாதனையை கடந்து, புதிய சாதனை படைப்பார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (T20Is, ODIs and Tests):
தற்போதைய கிரிக்கெட் உலகில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்துவிட்டு சமகால கிரிக்கெட் வரலாற்றினை எழுதிவிட முடியாது. இதுவரை 472 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 597 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் மூன்று சிக்ஸர்கள் பறக்கவிட்டால் ரோகித் சர்மா 600 சிக்ஸர்கள் விளாசிய முதல் சர்வதேச வீரர் என்ற மைல்கல்லை நிறுவுவார். தற்போது ஓய்வு பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 483 போட்டிகளில் 553 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.