ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
ENG Vs WI, T20 Worldcup: ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில், சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
ENG Vs WI, T20 Worldcup: ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
180 ரன்களை குவித்த மேற்கிந்திய தீவுகள்
செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த அணி 180 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் மற்றும் போவெல் ஆகியோர் தலா 36 ரன்களை சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ருதர்ஃபோர்ட் 15 பந்துகளில் 28 ரன்களை விளாசினார். இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித், ஆர்ச்சர், மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
A dominant win by England in St Lucia 🙌#T20WorldCup | #ENGvWI | 📝 https://t.co/yoAQ3gQdlb pic.twitter.com/0YTli2xiKQ
— ICC (@ICC) June 20, 2024
இங்கிலாந்து அணி அபார வெற்றி:
இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களிலும், மொயின் அலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் நிலைத்து நின்று ஆடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 47 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 87 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற ஜான்னி பேர்ஸ்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 48 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், 17.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுழன்றடித்த பில் சால்ட்:
குறிப்பாக 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்து இருந்தது. அப்போது 16வது ஓவரை ரொமார்யோ ஷெபர்ட் வீச பில் சால்ட் எதிர்கொண்டார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஓவரின் 6 பந்துகளையும் எதிர்கொண்ட சால்ட் 4,6,4,6,6,4 என வான வேடிக்கையை நிகழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றி மேலும் எளிதானது.
புள்ளிப்பட்டியல்:
வெற்றியின் மூலம் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்ரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. தலா ஒரு தோல்வியுடன் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி, புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது. சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்த பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.