Glenn Maxwell injury: ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சறுக்கல்? இந்திய அணிக்கு எதிராக கம்பேக் தரமாட்டாரா மேக்ஸ்வெல்..?
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல்லுக்கு காயம்பட்டுள்ளதால் அவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மேக்ஸ்வெல் காயம்:
டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பிறகு இரு அணிகளும் ஒருநாள் போட்டித்தொடரில் ஆட உள்ளன. மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ள இந்த ஒருநாள் போட்டித்தொடர் வரும் மார்ச் 17-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், தற்போதுள்ள சூழலில் அவர் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணிக்காக மேக்ஸ்வெல் களமிறங்கியபோது எதிரணி வீரர் அடித்த பந்தை தடுக்க ஃபீல்டிங் செய்தபோது பந்து அவரது கையில் பட்டு பலமாக தாக்கியது.
Glenn Maxwell cleared of a fracture for this knock on the wrist while fielding. Victoria still assessing when he’ll bat in the second innings #SheffieldShield pic.twitter.com/ZOZ2kpnQZV
— Jack Paynter (@jackpayn) February 21, 2023
அதில் வலி தாங்க முடியாமல் மேக்ஸ்வெல் மைதானத்திலே துடித்தார். உடனடியாக மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்தனர். அவரது காயத்தின் தன்மை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 2வது இன்னிங்சில் மேக்ஸ்வெல்லை பேட் செய்ய விக்டோரியா அணி அனுமதிக்கவில்லை.
களமிறங்குவாரா? மாட்டாரா?
ஆஸ்திரேலிய அணிக்காக மேக்ஸ்வெல் கடைசியாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி விளையாடினார். அவர் சர்வதேச அளவில் கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த நவம்பர் 4-ந் தேதி விளையாடினார். புத்தாண்டு பிறந்தது முதல் இதுவரை எந்தவொரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கவில்லை.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் மூலமாக மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக மேக்ஸ்வெல் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரது காயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆல்ரவுண்டர்:
சிறந்த ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம் உள்பட 339 ரன்களை குவித்துள்ளார். 127 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மேக்ஸ்வெல் 2 சதம், 23 அரைசதங்கள் உள்பட 3482 ரன்களை எடுத்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 10 அரைசதங்கள், 3 சதங்கள் உள்பட 2159 ரன்களை எடுத்துள்ளார். மேலும், பந்துவீச்சாளராக டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 60 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2319 ரன்களும், 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க: GrandMaster: கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றிய விக்னேஷ்..! புதிய வரலாறு படைத்த தமிழக சகோதரர்கள்..!
மேலும் படிக்க: Women's T20 World Cup 2023: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறதா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?