Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, கலங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohli: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்த பிறகு உடைந்த நிலையில் அமர்ந்திருந்த விராட் கோலியை, பயிற்சியாளர் டிராவிட் ஆறுதல் கூறி தேற்றினார்.
மீண்டும் சொதப்பிய கோலி:
நடப்பு டி20 உலகக் கோப்பை 2024-யில் விராட் கோலியின் ஃபார்ம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததை விட, மிகவும் மோசமாக இருப்பது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்படக் கூடிய கோலி, இந்த முறை தடுமாறி வருகிறார். உதாரணமாக தான், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். நேற்றைய போட்டியில் ரீஸ் டாப்லி வீசிய மூன்றாவது ஓவரில், விராட் கோலி ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்தார். ஆனால், அதே ஓவரில் கிளீன் போல்டாகி, 9 பந்துகளில் 9 ரன்களை எடுத்த நிலையில்ஆட்டமிழந்தார். ரன் சேர்க்க முடியாமல் கோலி திணறுவது என்பது, நடப்பு உலகக் கோப்பை தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
Rahul dravid went to Virat as he was looking broken after that dismissal, can't see him like this man 💔 #INDvsENG pic.twitter.com/X0nPoSdF5s
— a v i (@973Kohli) June 27, 2024
உடைந்துபோன கோலி:
மனம் உடைந்த விராட் கோலி, இந்திய வீரர்களுக்கான டக்அவுட்டில் ஏமாற்றத்துடன் சோகமே முகமாக அமர்ந்திருந்தார். மிகவும் உடைந்து போய் காணப்பட்டார். இதனை கண்ட இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை அணுகி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் முறையாக அரையிறுதியில் சொதப்பிய கோலி:
விராட் கோலி தனது வாழ்க்கையில் முதல்முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். T20 உலகக் கோப்பை 2024 இல் IND vs ENG அரையிறுதிக்கு முன், அவர் ஒவ்வொரு அரையிறுதி போட்டியிலும் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த முந்தைய டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட, அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி:
72* (44) vs தென்னாப்பிரிக்கா, 2014
89* (47) vs வெஸ்ட் இண்டீஸ், 2016
50 (40) vs இங்கிலாந்து, 2022
9 (9) vs இங்கிலாந்து, 2024
கோலி பற்றி ரோகித் சொன்னது என்ன?
கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய ரோகித் சர்மா, "அவர் (கோலி) ஒரு தரமான வீரர். எந்த வீரரும் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவருடைய திறமையையும் அவரது முக்கியத்துவத்தையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஃபார்ம் ஒரு பிரச்சனையல்ல" என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.