Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டை புறக்கணிக்கிறதா இந்தியா? உண்மை இதுதான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா புறக்கணிக்கப்போகிறது என்பது முற்றிலும் வதந்தி என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஆசிய கிரிக்கெட் போட்டித் தொடர் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் இரண்டாண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலும், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையிலும் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், பகல்ஹாம் தாக்குதல் காரணமாக உருவாகியுள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதலால் இரு நாட்டு அணிகளும் இனிமேல் மோதிக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசிய கோப்பையை புறக்கணிக்கிறதா இந்தியா?
இதனால், ஆசிய கிரிக்கெட் தொடரை ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு இந்திய கிரிக்கெட் அணியும் புறக்கணிக்கப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அளித்துள்ள பேட்டியில்,
"காலையில் இருந்து ஆசிய கோப்பை மற்றும் மகளிர் ஆசிய கோப்பை என இரண்டு தொடர்களிலும் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்தது. இந்த செய்திகளில் எந்த உண்மையும் தற்போது வரை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த தொடர்கள் குறித்து பிசிசிஐ எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. தற்போது எங்கள் முழு கவனமும் ஐபிஎல் மீதும் அடுத்து வரும் இங்கிலாந்து தொடர் மீதும் உள்ளது. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே ஆகும்."
இவ்வாறு அவர் கூறினார்.
பகல்ஹாம் தாக்குதல்:
பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா, இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டது. மேலும், எல்லைகளும் மூடப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய 100 பயங்கரவாதிகளை கொன்றது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் முயற்சிகளும் இந்தியாவில் முறியடிக்கப்பட்டது.
1984ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஆசிய கோப்பை தொடரில் 2023ம் ஆண்டு நடந்த தொடரில் சாம்பியனாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இரு நாட்டுத் தொடர்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி, உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஆசிய கிரிக்கெட் தொடர் ஆகிய போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















