Ind vs Ban, 1st Test: 150 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.. மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கியது. சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அணியின் ஸ்கோர் 112 ரன்களாக இருந்தபோது அதிரடியாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 45 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதன்பின்னர், அணியின் ஸ்கோர் 261 ரன்களாக இருந்த போது 203 பந்தில் 90 ரன்கள் குவித்து சதத்தினை நெருங்கிக்கொண்டு இருந்த புஜாரா எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
அஷ்வின் அரைசதம்:
இதன் பின்னர் களமிறங்கிய அக்ஷ்ர் பட்டேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. இந்தநிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அக்சார் பட்டேல் 14 ரன்களில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த அஷ்வின் - குல்தீப் ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர் பந்துகளை பதம் பார்க்க தொடங்கினர். இருவரும் இணைந்து 92 ரன்கள் சேர்க்க, நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்த அஷ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக, குல்தீப் யாதவ் 40 ரன்களிலும், உமேஷ் யாதவ் 2 சிக்ஸர்கள் அடித்து 15 ரன்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வங்கதேசம்:
அதன் பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, இரண்டாவது நாளின் ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை வகித்து இருந்தது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.
வங்கதேச அணி ஆல் - அவுட்:
இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி கூடுதலாக, 17 ரன்களை மட்டுமே சேர்த்து 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக, முஸ்தபிசுர் ரஹ்மான் 28 ரன்களை சேர்த்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 254 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 16 ரன்களை எடுத்துள்ளது.