Babar Azam Beat Kohli Record : அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்! கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்..!
அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த ஆசிய வீரர் என்ற விராட்கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே காலே மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிகவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களையும் சேர்த்து 228 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் 248 இன்னிங்ஸ்களுடன் தன்வசம் வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் விராட்கோலியும், ஸ்டீவ் ஸ்மித்தும் தங்களது 232வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருந்தனர். அந்த சாதனையையும் பாபர் அசாம் தற்போது முறியடித்துள்ளார். இதுமட்டுமின்றி அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த ஆசிய வீரர் என்ற விராட்கோலியின் சாதனையையும் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
Babar Azam is in a league of his own 🌟#WTC23 | #SLvPAK pic.twitter.com/AOWBhDFrkg
— ICC (@ICC) July 17, 2022
சர்வதேச அளவில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தன்வசம் வைத்துள்ளார். அவர் 206 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஹசிம் அம்லா 217 இன்னிங்ஸ்களிலும், லாரா 220 இன்னிங்ஸ்களிலும், ஜோ ரூட் 222 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 222 ரன்களில் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 218 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் அவுட்டாகியது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் அசாம் மட்டும் சிறப்பாக ஆடி 119 ரன்கள் குவித்தார்.
28 வயதான பாபர் அசாம் 41 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள், 21 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 970 ரன்களும், 89 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 19 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 442 ரன்களும், 74 டி20 போட்டிகளில் 1 சதத்துடன் 2 ஆயிரத்து 686 ரன்களும் விளாசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்