Meg Lanning Retires: 5 முறை உலகக் கோப்பை சாம்பியன்.. ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங்!
ஆஸ்திரேலியாவுக்காக 241 போட்டிகளில் விளையாடியுள்ள லானிங், 182 போட்டிகளில் கேப்டனாக மெக் லானிங் செயல்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது 31 வயதே ஆகிறது. 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஆஸ்திரேலியாவுக்காக 241 போட்டிகளில் விளையாடியுள்ள லானிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இதுவே சரியான நேரம் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்காக 241 போட்டிகளில் விளையாடியுள்ள லானிங், 182 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 31.36 என்ற சராசரியில் 345 ரன்களையும், அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 53.51 சராசரியுடன் 4,602 ரன்களையும், டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 36.61 சராசரியுடன் 3,405 ரன்களையும் எடுத்தார்.
தனது ஓய்வு குறித்து லானிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்வது கடினமாக இருந்தது. ஆனால், ஓய்வு பெறுவது இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். 13 வருடம் சர்வதேச கிரிக்கெட்டை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. தற்போது, ஒரு புதிய ஆரம்பத்திற்காக செல்ல விரும்புகிறேன்.
நீங்கள் என்ன விளையாட்டு விளையாடினாலும், அணியின் வெற்றிக்காகவே இருக்கும். நான் இதுவரை கிரிக்கெட்டில் சாதித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன், மேலும், என் சக வீராங்கனைகளுடன் நான் பகிர்ந்து கொண்ட தருணங்களை நினைத்து ரசிப்பேன். நான் எனது குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடுவேன். நான் விரும்பும் விளையாட்டை விளையாட எனக்கு வாய்ப்பளித்த எனது அணியினர், கிரிக்கெட் விக்டோரியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது சர்வதேச வாழ்க்கை முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உடல்நிலை காரணமாக மெக் லானிங் தொடர்ந்து, இந்த ஆண்டு இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. மெக் லானிங் தற்போது மகளிர் பிக் பாஷ் லீக்கில் (WBBL) மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார், மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறார்.
மெக் லானிங் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
மெக் தனது 18 வயதில் 2010 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். மெக் லானிங் ஆஸ்திரேலியா அணிக்காக 241 போட்டிகளில் (6 டெஸ்ட், 103 ஒருநாள் மற்றும் 132 டி20) விளையாடி 17 சதங்கள், 38 அரை சதங்களுடன் மொத்தம் 8, 352 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது பந்து வீச்சு மூலம் 5 சர்வதேச விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
2014-ம் ஆண்டு தனது 21-வது வயதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை பெற்றார். மேலும் இந்த நேரத்தில் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக உருவெடுத்தார். அவரது தலைமையின் கீழ், ஆஸ்திரேலியா 4 டி20 உலகக் கோப்பைகள், 1 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 1 காமன்வெல்த் விளையாட்டுப் பட்டங்களை வென்றது.லானிங்கின் ஓய்வுடன் அவரது 10 ஆண்டுகால கேப்டன்சிப் பணியும் முடிவுக்கு வந்தது. இப்போது இவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.