Ashwin on Virat - Shasthri duo: அஷ்வின் மட்டும்தான் தூக்கி எறியப்பட்டாரா? கோலி - சாஸ்திரி கூட்டணியின் இன்னொரு முகம்!
கிரிக்கெட்டை டெக்னிக்கலாக அனுகுபவர்கள், வெறும் ரசிப்புத்தன்மையோடு மட்டுமே அனுகுபவர்கள் என அத்தனை பேருக்குமான தீனி அந்த பேட்டியில் இருந்தது.
இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஒரு ஆங்கில இணைதளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அஷ்வினின் கிரிக்கெட் வாழ்க்கை, அவர் காயங்களை எதிர்கொண்ட விதம், வீழ்ச்சியிலிருந்து அவரின் மீள் வருகை என பல விஷயங்கள் குறித்தும் அஷ்வின் அந்த பேட்டியில் விரிவாக பேசியிருந்தார். கிரிக்கெட்டை டெக்னிக்கலாக அனுகுபவர்கள், வெறும் ரசிப்புத்தன்மையோடு மட்டுமே அனுகுபவர்கள் என அத்தனை பேருக்குமான தீனி அந்த பேட்டியில் இருந்தது. அஷ்வினின் அந்த பேட்டியில் அவர் பேசிய ஒரு குறிப்பிட்ட விஷயம் அதிக கவனத்தை ஈர்த்தது.
அஷ்வின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சமயங்களில் அவர் எப்படி உணர்ந்தார்? என்பது போன்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு 'நான் ரவிசாஸ்திரி மீது மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஆனால், நான் அணியில் தேர்ந்தெடுக்கப்படாத சமயத்தில், இனி குல்தீப்தான் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர் என ரவிசாஸ்திரி பேசிய சமயத்தில் முழுமையாக உடைந்து போய்விட்டேன். குல்தீப்பிற்காக குல்தீபின் பெர்ஃபார்மென்ஸிற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் நான் கூட 5 விக்கெட் ஹால் எடுக்கவில்லை. குல்தீப் எடுத்திருக்கிறார். அவருக்காக முழுமையாக மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், அந்த கொண்டாட்டத்தில் நான் அணியுடன் பங்கெடுக்க வேண்டுமெனில் நான் அவர்களில் ஒருவனாக உணர வேண்டும். நான் அப்படி உணரவில்லையே. நான் தூக்கியெறியப்பட்டவனாக இருந்தேன்' என பேசியிருந்தார்.
இந்திய அணி 2018-19 இல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, டெஸ்ட் தொடரில் அஷ்வின் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடியிருப்பார். அடிலெய்டில் நடைபெற்ற அந்த முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். இந்த போட்டியின் போதே கொஞ்சம் அசௌகரியமாக இருந்த அஷ்வின் அடுத்த போட்டிக்கு முன்பாக காயமடைந்து அதன்பிறகு அந்த தொடரில் ஆட முடியாமல் போய்விடும். இந்த சமயத்தில்தான் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் களமிறங்கி முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இது அஷ்வினே செய்திடாத சாதனை. இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரவிசாஸ்திரி 'வெளிநாடுகளில் ஆடும் போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டும்தான் இடம் உண்டெனில் அந்த ஒரு இடம் குல்தீப் யாதவ்க்குதான்' என வெளிப்படையாக பேசியிருப்பார். இனி குல்தீப் யாதவ்க்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோம். சீனியரான அஷ்வின் மெதுமெதுவாக ஓரங்கட்டப்படுவார் என்பதே இந்த ஸ்டேட்மெண்ட்டின் மறைபொருள்.
ரவிசாஸ்திரியின் இந்த ஸ்டேட்மெண்டோடு மேலே குறிப்பிட்ட அஷ்வின் பேசிய பகுதியையும் இணைத்து பாருங்கள் முழுமையாக விஷயத்தை புரிந்துக்கொள்ளலாம். ஜுனியரான குல்தீப் யாதவ்விற்காக சீனியரான அஷ்வின் ஓரங்கட்டப்பட தொடங்கினார். வெளிநாட்டு போட்டிகளில் குல்தீபிற்கு அடுத்த இடமே அஸ்வினுக்கு என்ற நிலை இருந்தது. ஏற்கனவே லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டிருந்த அஷ்வின் டெஸ்ட் போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளுக்கான வீரராக மட்டுமே சுருக்கப்பட்டார். இது அஷ்வினை மனதளவில் பெரிதாக பாதித்திருக்கிறது.
ஒருகட்டத்திற்கு பிறகு எவ்வளவோ ரெக்கார்டுகளை வைத்திருந்தாலும் அடுத்த தலைமுறை வீரர்களுக்காக சீனியர் வீரர்கள் மெதுமெதுவாக ஓரங்கட்டப்படுவது வழக்கம்தான். இது பல அணிகளிலும் நடந்திருக்கிறது. இந்திய அணியிலேயே முன்னாள் கேப்டன் தோனி கூட அப்படியான சில முடிவுகளை எடுத்திருக்கிறார். ஆனால், கோலி-சாஸ்திரி கூட்டணியில் பிரச்சனை என்பது அவர்கள் மாற்றாக முன்நிறுத்தும் பளபள இளம் கண்ணாடி பொம்மைகளை முறையாக பாதுகாத்தார்களா இல்லை பாதியிலேயே கைவிட்டு சுக்குநூறாக உடைத்து போட்டார்களா? என்பதே!
குல்தீப்தான் இனி இந்திய அணியின் முதல் சாய்ஸ் என ரவிசாஸ்திரி 2019 தொடக்கத்தில் பேசினார் இல்லையா? அதன்பிறகு, குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக எத்தனை போட்டிகளில் ஆடியிருக்கிறார்? என்கிற ரெக்கார்டை எடுத்து பார்த்தால் அதிர்ச்சிதான் மேலோங்கும். ரவிசாஸ்திரியின் அந்த ஸ்டேட்மெண்ட்டுக்கு பிறகு, ஏறக்குறைய கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே குல்தீப் யாதவ் ஆடியிருக்கிறார். 400+ விக்கெட்டுகளை எடுத்திருந்த அஷ்வினை விட இவருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என முன்நிறுத்தப்பட்ட வீரர் அதன்பிறகு வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடியதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? குல்தீப் யாதவ் இடையில் ஆங்காங்கே காயமடைந்திருக்கலாம். ஆனால், அவர் முழுமையாக கிரிக்கெட்டை விட்டு விலகிவிடவில்லை. 2020-21 ஆஸ்திரேலிய தொடர் முழுமைக்கும் இந்திய அணியோடுதான் இருந்தார். கடந்த டெஸ்ட் தொடரில் உச்சாணிக்கொம்பில் வைத்து பேசப்பட்ட குல்தீபிற்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்கள். அந்த அலுவலகத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். உங்களின் சீனியர்களை விடவும் நீங்கள்தான் இந்த நிறுவனத்திற்கு அதிகமாக தேவைப்படுகிறீர்கள் எனும் எண்ணத்தை உண்டாக்குகிறார். அப்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அப்படியே வானத்தில் பறப்பதை போல இருக்கும். ஆனால், அதே உயர் அதிகாரி சில மாதங்களிலேயே தலைகீழாக செயல்பட தொடங்கினால் எப்படியிருக்கும்? பெரிய காரணமேதும் இன்றி அலுவலகத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு நீங்கள் மட்டுப்படுத்தப்பட்டால் எப்படி உணர்வீர்கள். மொத்த உடைந்து போயிருப்பீர்கள். இந்திய அணி எனும் அமைப்பில் அஷ்வினும் அப்படித்தான் உடைந்து போனார். குல்தீபும் அப்படித்தான் உடைந்து போனார்.
குல்தீப் யாதவ் இளம் வீரராக துடுக்குத்தனமாக இருந்தாலும் மனதளவில் பெரிதாக பக்குவப்படாதவர். ஒரு ஐ.பி.எல் போட்டியில் மொயீன் அலி குல்தீபின் ஓவரை வெளுத்தெடுத்திருப்பார். அந்த சமயத்தில் தனது ஸ்பெல்லை முடித்துவிட்டு குல்தீப் யாதவ் மைதானத்திலேயே குழந்தை போல கேவி கேவி அழுதிருப்பார். இப்படியான ஒரு குழந்தைமனம் படைத்தவருக்கு குச்சி மிட்டாயை காண்பித்து ஆசைக்காட்டி ஏமாற்றுவதை போலவே கோலி-சாஸ்திரி கூட்டணி செயல்பட்டது. இப்போது இந்திய அணியின் தேர்வுக்குழு ரேடாரிலேயே குல்தீப் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஒரு வீரரை நீங்கள்தான் இனி எல்லாம் என நம்பவைத்து பின்னர் பெரிய காரணமேயின்றி அவர்களை ஓரங்கட்டி நம்பிக்கையை உடைப்பது கோலி-சாஸ்திரி கூட்டணியின் பெரும் பின்னடைவாக இருந்தது.
அஷ்வின், குல்தீப் யாதவ் மட்டுமில்லை. அம்பத்தி ராயுடு ரிஷப் பண்ட் போன்றோரும் அப்படியே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் 2019 உலகக்கோப்பைக்கான அணியில் முதலில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. அந்த உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே தவான் காயமடைந்திருப்பார். தவானுக்கு மாற்றாக ஒரு வீரர் வேண்டும் என்றவுடன் கோலி-சாஸ்திரி கூட்டணி டிக் அடித்த பெயர் ரிஷப் பண்ட். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இவர்தான் அணியின் நம்பர் 4, நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார் என நம்ப வைக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருந்த அம்பத்தி ராயுடுவே மாற்று வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், ரிஷப் பண்ட்தான் மாற்றுவீரராக வந்தார். அதுவும் அணியில் ஏற்கனவே தோனி, தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் என மூன்று விக்கெட் கீப்பர்கள் இருந்தும் நான்காவதாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தளவுக்கு ரிஷப் பண்ட்டின் மீது கோலி-சாஸ்திரி கூட்டணி நம்பிக்கை வைத்திருந்தது. அடுத்த தோனியாகவே ரிஷப் பண்ட் பார்க்கப்பட்டார். ஆனால், அந்த உலகக்கோப்பை முடிந்த பிறகு லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பண்ட்டை மெதுவாக ஓரங்கட்ட தொடங்கினர். கே.எல்.ராகுலே விக்கெட் கீப்பிங் பணியையும் சேர்த்து பார்த்து கொண்டு ஓப்பனிங் டூ லோயர் மிடில் ஆர்டர் என கிடைக்கிற இடத்தில் ஆடிக்கொண்டிருந்தார். அம்பத்தி ராயுடுவுக்கு அந்த உலகக்கோப்பை ஏமாற்றத்திற்கு பிறகு இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்கிற ஆசையே இல்லாமல் போய்விட்டது.
கொரானா லாக்டவுண் எல்லாம் முடிந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பயணப்பட்டது. அங்கே டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் ஆடியது. ஒரு பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் வெறித்தனமாக ஆடியிருப்பார். 73 பந்துகளில் ஒரு சென்ச்சூரி அடித்து தன்னுடைய ஃபார்மை வெளிக்காட்டியிருந்தார். அணியின் இன்னொரு விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹாவே இப்போதைய ஃபார்ம்படி ரிஷப் பண்ட் அணியில் ஆடினால் எனக்கு மகிழ்ச்சியே என்று கூறியிருப்பார். ஆனால், ரிஷப் பண்ட் சதமடித்து மூன்றே நாட்களில் அடிலெய்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ப்ளேயிங் லெவனில் இல்லை. அவருக்கு பதில் விருத்திமான் சஹாவே ஆடியிருந்தார். அந்த போட்டியில்தான் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அவமானகரமான தோல்வியை சந்தித்திருக்கும். அடுத்த தோனியாக முன்நிறுத்தப்பட்ட வீரர் சதமடித்த பிறகும் அணியில் இடம் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டார்.
கோலி முதல் போட்டியோடு இந்தியாவிற்கு திரும்பிவிட ரஹானே கேப்டன் ஆனார். விருத்திமான் சஹாவுக்கு பதில் ரிஷப் பண்ட் அணிக்குள் வந்தார். அந்த தொடரை இந்தியா வென்று சரித்திரம் படைக்க மிக முக்கிய காரணமாக ரிஷப் பண்ட் இருந்தார்.
இப்படி கோலி-சாஸ்திரி கூட்டணியால் நம்பவைக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அஷ்வினை மறைமுகமாக சாடிய ரவிசாஸ்திரியே மீண்டும் அஷ்வினை முழுமையாக நம்பும் காலக்கட்டமும் வந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியுசிலாந்து ஸ்பின்னர்களே இல்லாமல் இறங்க, இந்திய அணி அஷ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்களோடு இறங்கியிருக்கும். இங்கிலாந்தில் இரண்டு ஸ்பின்னர்கள் தேவையா? அஷ்வின் அல்லது ஜடேஜா இருவரில் ஒருவரை வெளியில் எடுக்கலாமே? என கேட்ட போது, 'அஷ்வின், ஜடேஜா இருவருமே சாம்பியன் வீரர்கள். மைதானம், வானிலை இவற்றையெல்லாம் தாண்டி எங்கு ஆடினாலும் நாங்கள் இந்த இருவரையும் வைத்து ஆடுவோம்' என ரவிசாஸ்திரி பயங்கர பாசிட்டிவ்வாக பேசியிருந்தார். குல்தீப்தான் நம்பர் 1 என பேசியவர் வாயிலிருந்து அஷ்வினை பற்றி இப்படி கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அஷ்வினும் அந்த போட்டியில் நன்றாகவே வீசியிருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட நியுசிலாந்து வீரர்களை பயமுறுத்தவில்லை. அஷ்வின் பயமுறுத்தியிருந்தார். இந்தியா தோற்றாலும் அஷ்வின் நன்றாக செயல்பட்டிருந்தார். இந்த போட்டியை முடித்துவிட்டு இந்திய அணி இங்கிலாந்திலேயே தங்கியிருந்து இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆடியிருந்தது.
இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ஒன்றரை மாதம் எந்த வேலையுமின்றி சும்மாவே இருந்தனர். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தனர். ஆனால், அஷ்வின் மட்டும் தனது கிட் பேக்கை தூக்கிக் கொண்டு கவுண்ட்டி கிரிக்கெட் ஆட சென்றுவிட்டார். இங்கிலாந்து தொடருக்கு முன் நல்ல பயிற்சியாக இருக்கும் என்பது அஷ்வினின் எண்ணம். ஆடிய ஒரு கவுண்ட்டி போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார். ஆவலோடு இங்கிலாந்து தொடருக்காக முழுமையாக தயாராகி காத்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு ட்விஸ்ட். 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. கொரோனா காரணமாக ஒரு போட்டி அடுத்த வருடம் நடக்க இருக்கிறது. நடந்து முடிந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அஷ்வின் ஆட வைக்கப்படவில்லை. எல்லா போட்டியிலுமே பென்ச்சில் வைக்கப்பட்டார். ஏன்? எதற்கு? விடை யாருக்கும் தெரியாது. ஒரு போட்டியில் சக வீரர்களுடன் இல்லாமல் அஷ்வின் மட்டும் தனியாக வந்து ஒரு ஓரமாக அமர்ந்திருப்பார். அந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரல் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த அஷ்வினின் மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும்? இரண்டு மாதங்களுக்கு முன்பு எந்த மைதானத்திலும் அஷ்வினை வைத்து ஆடுவோம் என ரவிசாஸ்திரி கொடுத்த பேட்டியே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்திருக்கும். அஷ்வின் மீண்டும் தூக்கி எறியப்பட்டதாக உணர்ந்திருப்பார். கவலைப்படாதீர்கள் அஷ்வின்! அவர்கள் உங்களுக்கு மட்டும் நம்பிக்கை கொடுக்கவில்லை. உங்களை மட்டும் தூக்கி எறிவில்லை!!