Asian Games 2023: விளையாடாமலே காலிறுதிக்கு தகுதி.. ஆசிய விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணிகள்..? முழு விவரம்!
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் காலிறுதியில் வெற்றி பெற்றால், அக்டோபர் 6ம் தேதி அரையிறுதியில் விளையாடும்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டியானது சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி நடைபெற இருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் டி20 போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 தரவரிசை பட்டியலை அடிப்படையில் இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் 2023 ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிக்கு நேரடியாக சென்றுள்ளது. அதன் அடிப்படையில், அக்டோபர் 5ஆம் தேதி இந்திய ஆடவர் அணி காலிறுதி ஆட்டத்திலும், மகளிர் அணிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்திய ஆடவர் அணி:
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் காலிறுதியில் வெற்றி பெற்றால், அக்டோபர் 6ம் தேதி அரையிறுதியில் விளையாடும். தொடர்ந்து, அக்டோபர் 7ம் தேதி இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணி வென்று தங்க பதக்கத்தை வெல்லும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை விரைவில் களத்தில் காணலாம்.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுடன், 2023 கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையும் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, இந்திய பி அணியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பி அணிகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெற்றி எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய அணியின் அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் 14 அணிகளும், ஆடவர் கிரிக்கெட்டில் 18 அணிகளும் மோத இருக்கின்றன. செப்டம்பர் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை பெண்களுக்காக கிரிக்கெட் போட்டிகளும், செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான தொடரின் கடைசி போட்டிக்குப் பிறகு நடுவர் குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஹர்மன்பிரீத் இறுதிப்போட்டியில் விளையாடலாம்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி : ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், , முகேஷ் குமார், சிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலிஸ் சவாத்யா, அஞ்சலி ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அஹுஜா, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), அனுஷா பரேடி