Rohit ODI Record: பேட்டிங்கில் அதிரடி.. சாதனையில் சரவெடி: ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த ரோகித் சர்மா..!
Rohit ODI Record: சர்வதேச அரங்கில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களில் இந்திய அணியினரின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது.
Rohit ODI Record: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அப்படி கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட நபர்களும் உண்டு, சொதப்பியவர்களும் உண்டு.
அப்படி தனது கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி இந்திய அணியில் தன்னை தக்கவைத்துக்கொண்டது மட்டும் இல்லாமல் இன்று இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார் ரோகித் சர்மா. இவர் தனது அதிரடடியான பேட்டிங்கினால் பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டைச் சதம் விளாசியுள்ள வீரர் என்றால் அது ரோகித் சர்மா தான். இப்படியான சாதனையைப் படைத்திருக்கும் ரோகித் சர்மா தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இது அவரது 248வது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக முதன் முதலில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ரோகித் சர்மா. அதன் பின்னர் 247 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதாவது 16 வருடங்கள் 81 நாட்களுக்குப் பின்னர் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். அதே நேரத்தில் ரோகித் இந்த சாதனையைப் படைக்க மொத்தம் 241 இன்னிங்ஸில் மட்டும் பேட்டிங் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதில் மூன்று முறை இரட்டைச் சதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மாவைப் பொறுத்தவரையில் 30 சதங்களும் 50 அரைசதங்களும் ஒருநாள் கிரிக்கெட் வரிசையில் அடித்துள்ளார். அதேபோல் இதுவரை, ஒருநாள் தொடரில் மட்டும் 922 பவுண்டரிகளும் 286 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
இந்நிலையில் ஆசிய கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் ரோகித் சர்மா, ஒருநாள் தொடரில் தனது 10 ஆயிரமாவது ரன்களை எட்டியுள்ளார். மேலும் இந்த போட்டியில் அவர் அடித்துள்ள அரைசதம் ஒருநாள் தொடரில் இவரது 51வது அரைசதமாக பதிவாகியுள்ளது.
அதேபோல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் ஒருநாள் தொடரில் அடித்த 6வது வீரர் என்ற பெருமையை ரோகித் தனதாக்கியுள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் தெண்டுல்கர், டிராவிட், கங்குலி, விராட் கோலி மற்றும் தோனி இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அதேபோல் சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 15வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களில் இந்திய அணியினரின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. அதேபோல் ரோகித் சர்மா இந்த சாதனையை 49 ரன்கள் ஆவரேஜில் எட்டியுள்ளார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
ரோகித் சர்மா மீது வைக்கப்பட்ட விமர்சனமே, சமீபகாலமாக ரோகித் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் ரோகித்துக்கு குடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால், அழுத்தத்தை கையாளுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பலரும் விமர்சங்கள் வைத்து வந்தனர். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டி என இரண்டு போட்டிகளில் அவர் அடுத்தடுத்த அரைசதம் விளாசியுள்ளது, உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாகவே ரோகித் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.