Asia Cup 2022: பேட்டி கொடுத்தது பழைய கோலியா? வேதனையில் ரசிகர்கள்.. அப்படி என்ன பேசினார்?
நீண்ட நாளுக்குப் பிறகு இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி செய்தியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பேட்டி அளித்துள்ளார்.
Asia Cup 2022: விராட் கோலி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ரன் மிஷின், காட் ஆஃப் கவர் ட்ரைவ் என்றெல்லாம் சொல்லுவார்கள். அதேநேரத்தில் மிகவும் ஆக்ரோஷமான வீரர் எனவும் சொல்லுவார்கள். மிகவும் ஆக்ரோஷமான வீரராக அறியப்பட்ட விராட் ஐசிசியின் பேட்டிக்கு மிகவும் தாராளமாக மனம் விட்டு பேசியுள்ளார். அதில் இதுவரை கண்டிறாத மற்றும் உடைந்து போன விராட் கோலியாக தென்படுகிறார். ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து டக் அவுட் ஆனபோது கூட, களத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு அனுபவ சிரிப்பு சிரித்ததை யாரும் மறக்கமாட்டார்கள். அப்படியான விராட் கோலியைப் பார்த்து கூட தைரியமாக இருந்த விராட் கோலியின் ரசிகர்கள், இந்த பேட்டியைப் பார்த்து மிகவும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர் என்றே கூற வேண்டும். அப்படி என்ன பேசினார் விராட் கோலி, அந்த பேட்டியில் விராட் பேசியது,
”நான் என் வாழ்நாளில் நினைத்துக் கூட பார்க்காத ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்துள்ளது. ஆமாம், கடந்த 30 நாட்களில் நான் பேட்டை தொடவே இல்லை. இது என் வாழ்வில் பேட்டைத் தொடாமல் ஒரு 30 நாளை கடக்க நேரிடும் என என் கனவில் கூட நினைத்தது இல்லை. மேலும், நான் வெளியில் பலமாக உள்ளேன் என பொய் சொல்வதைவிடவும், மனதளவில் பலவீனமாக இருப்பதை வெளியில் சொல்வதே சரி. அப்படி வெளியில் சொல்லுகையில் எனக்கு நான் உண்மையாக இருப்பதோடு, நிம்மதியாக நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளேன்” என கூறியுள்ளார். விராட் கோலி இவ்வாறு கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், விராட் கோலியின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
நாளை நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டிக்கு முன்னர் விராட் இப்படி பேசியிருப்பது, மிகவும் கவத்தினை பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு முதலே விராட் ஃபார்ம் அவுட்டில் உள்ளார். இந்நிலையில் ஆசிய கோப்பையில் அவர் மீண்டு வருவார் என அனைவரும் ஆவலுடன் இருந்த நிலையில், விராட்டின் இந்த பேட்டி ஏமாற்றத்தினை ஏற்பட்டுள்ளது.
தனது 100வது சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடவுள்ள கிங் கோலி தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானது, ஜும்பாவேவ் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி அறிமுகமானார். தனது முதல் போட்டியில் 21 பந்தில் 26 ரன்கள் அடித்தார். அதில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து அணி வெற்று பெரும்போது களத்தில் இருந்தார். அன்று முதல் இன்று வரை விராட் கோலி தனது கிரிக்கெட் கெரியரில் பல ஏற்றங்களையும் சறுக்கல்களையும் கண்டுள்ளார்.
குறிப்பாக இந்திய அணியை வழிநடத்தும் மாபெரும் கேப்டனாக வலம் வருவார் என யாரும் நினைக்கவில்லை. ஒரு வீரராக இதுவரை 99 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி, 50 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 30 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் டிராவும் இரண்டு போட்டிகளில் முடிவு எதும் இல்லாமலும் இருந்துள்ளது. இவர் அணியை வழிநடத்தி அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ள வெற்றி விகிதம் என்பது, 64.58% ஆகும்.
வரும் 28ம் தேதி அதாவது நாளை 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர் கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கவுள்ள விராட் கோலி, இதுவரை சர்வதேச டி20 போட்டியில், 3,308 ரன்கள் அடித்துள்ளார். இதில் குறிப்பாக 30 அரை சதங்களை விளாசியுள்ளார். டி20 போட்டியைப் பொறுத்த வரையில் விராட் கோலி சர்வதேச அளவில் இன்னும் சதம் அடிக்கவில்லை. டி20 போட்டியைப் பொறுத்தவரையில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் என்பது, 94 ரன்களுக்கு நாட்-அவுட் என்பது தான். டி20 போட்டியில் இதுவரை விராட் கோலி, 299 பவுண்டரிகளும், 93 சிக்ஸர்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.