IND vs PAK Asia Cup 2022 : இந்தியா - பாகிஸ்தான் மோதும் துபாய் மைதானம் எப்படி..? டாஸ் வெல்வது முக்கியமா..?
IND vs PAK Asia Cup 2022 : இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மோதும் துபாய் மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இன்று பாகிஸ்தான் அணியுடன் மோதுகின்றது. கடந்த உலககோப்பை டி20 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிறகு நடைபெறும் போட்டி என்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து ரன் எடுக்க தடுமாறியது. இரண்டாவது பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 106 ரன்கள் இலக்கை 10.1 ஓவர்களிலே எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.
இதனால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இதனால், இந்திய கேப்டன் ரோகித்சர்மா டாஸ் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் இதுவரை 75 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், முதலில் பேட் செய்த அணி 34 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது பேட் செய்த அணி 40 முறை வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்யும் அணிகள் சராசரியாக 141 ரன்களை எடுக்கிறது. இரண்டாவது பேட் செய்யும் அணி சராசரியாக 124 ரன்களை எடுக்கிறது. அதிகபட்சமாக இந்த மைதானத்தில் டி20 போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 211 ரன்களை எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளது.
போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகம் அணி நிர்ணயித்த 183 ரன்களை சேஸ் செய்து அசத்தியுள்ளது. குறைந்தபட்சமாக ஓமன் அணி 134 ரன்களை மட்டுமே முதலில் பேட் செய்து ஹாங்காங் அணியை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் பழிதீர்க்க இந்தியாவும். வெற்றி பெற பாகிஸ்தானும் துடிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க : IND vs PAK Asia Cup 2022: உலகக் கோப்பை தோல்வி.! பதிலடி கொடுக்குமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்! முழு விவரம்!
மேலும் படிக்க : Virat Kohli: மீண்டு வா தலைவா..! மீண்டும் வா!! இது உனக்கான இடம்... ட்விட்டரில் கோலிக்கு ஆதரவளிக்கும் இந்தியா!