Arshdeep Singh: சிங்குனா கிங்குடா..! விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய அர்ஷ்தீப் சிங் - யார்க்கரில் விக்கெட்டுகளை பதம் பார்த்து மிரட்டல்
Arshdeep Singh: இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் ரசிகர்களது கவனத்தை ஈர்த்துள்ளார்.
Arshdeep Singh: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற போது, எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சால் சரியான பதிலடி தந்துள்ளார்.
கோப்பையை வென்ற இந்திய அணி:
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்திய தனது லீக் சுற்று போட்டிகள் அனைத்தையும், அமெரிக்காவிலேயே விளையாடியது. உண்மையை சொல்ல போனால், தொடரின் ஆரம்ப போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாகவே இருந்தது. பந்து வீச்சு தான் அணியின் முக்கிய பலமாக இருந்தது. பாகிஸ்தான் உடனான போட்டியில் மிக சொற்ப ரன்களே அடித்து இருந்தாலும், அபாரமான பந்துவீச்சு காரணமாகவே இந்தியா வெற்றி பெற்றது. அதற்கு நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவிற்கு துணையாக, தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்கும் ஒரு காரணமாகும். ஆனால், இவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற போது, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அவற்றிற்கு தனது செயல்பாட்டால் சரியான பதிலடி தந்துள்ளார்.
விமர்சனங்களை எதிர்கொண்ட அர்ஷ்தீப் சிங்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் சிங் விளையாடினார். மொத்தம் 14 போட்டிகளில் களமிறங்கி 19 விக்கெட்டுகளை சாய்த்தார். ஒரு போட்டியில் 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 ரன்களை சாய்த்ததே சிறப்பான பந்துவீச்சாக இருந்ததே. அதேநேரம், அவரது எகானமி சராசரியாக ஓவருக்கு 10 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், அவரை விட பல இந்திய பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். அப்படி இருந்தும் அர்ஷ்தீப் சிங் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதனால், ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந்திய அணிக்கு இது நல்ல முடிவை தராது எனவும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
India is jubilant tonight … 😂👏🏼 .. and it is all happening here on @X 🏆🇮🇳
— حسن سجواني 🇦🇪 Hassan Sajwani (@HSajwanization) June 29, 2024
pic.twitter.com/er0heZqQGU
உலகக் கோப்பையில் அசத்திய அர்ஷ்தீப் சிங்:
கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் உலகக் கோப்பையில் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங், மொத்தம் 9 போட்டிகளில் களமிறங்கினார். அதில் 30 ஓவர்களை வீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை, நடப்பு உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ஃபரூக்கி உடன் சேர்ந்து அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். அயர்லாந்து அண்க்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளையும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டும், அமெரிக்கா உடனான போட்டியில் 4 விக்கெட்டுகளையும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். அதோடு நடப்பு உலகக் கோப்பையில், ரன்களையும் விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
இறுதிப்போட்டியில் அசத்தல்:
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், அர்ஷ்தீப் சிங் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். குறிப்பாக எய்டன் மார்க்ரம் மற்றும் டி காக் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக அர்ஷ்தீப் சிங்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.