Ambati Rayudu: 2013-ல் இந்திய அணிக்காக தொப்பியை வாங்கியபோது... ஓய்வுக்கு பிறகு அம்பதி ராயுடு நெகிழ்ச்சி!
நான் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு ஐபிஎல் அணிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என அம்பதி ராயுடு தெரிவித்திருந்தார்.
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த கோப்பையை வென்றதன் மூலம் அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையை ரோகித்துடன், அம்பதி ராயுடு பகிர்ந்து கொண்டார்.
இந்த போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று தனது ஓய்வு குறித்து இன்று அம்பதி ராயுடு அறிக்கை ஒன்றை அறிவித்தார். அதில், “ ஒரு சிறப்புமிக்க ஐபிஎல் வெற்றியின் உச்சக்கட்டத்தை அடைந்த உணர்ச்சிகரமான இரவு இது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். வீட்டில் டென்னிஸ் பந்தில் விளையாட சிறுவயதில் கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்து, தற்போது 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
15 வயதுக்குட்பட்டோரிலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை எனது நாட்டிற்காக விளையாடியது எனது மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். 2013ல் முதன்முறையாக இந்திய தொப்பியை நான் பெற்ற நாள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது - அது நான் என்றென்றும் போற்றும் நினைவு.
எனக்கு நம்பிக்கை காட்டிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ஏசிஏ), ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்சிஏ), விதர்பா கிரிக்கெட் சங்கம் (விசிஏ) மற்றும் பரோடா கிரிக்கெட் சங்கம் (பிசிஏ) ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு ஐபிஎல் அணிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
— ATR (@RayuduAmbati) May 30, 2023
2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸின் முதல் ஐபிஎல் வெற்றியின் ஒரு பகுதியாக இருப்பதுடன், 2018, 2021 இல் சென்னை சூப்பர் கிங்ஸுடன் ஐபிஎல் பட்டத்தை வென்றது மற்றும் 2023 ஆம் ஆண்டு எனக்கு என்றென்றும் இருக்கும் நினைவுகள்.
சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் அணி ஆகிய இரு அணிகளிலும் கேப்டன் தோனியுடன் விளையாடியது ஒரு பெரிய பாக்கியம். கடந்த 20 ஆண்டுகளாக களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில சிறந்த நினைவுகளை நாங்கள் பெற்றுள்ளோம், அது என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
எனது அன்பான குடும்பத்தின், குறிப்பாக எனது தந்தை சாம்பசிவ ராவ் ஆதரவு இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை.
எனது ஆரம்ப நாட்களில் இருந்த எனது சக வீரர்கள், துணை ஊழியர்கள், ரசிகர்கள் மற்றும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி, நீங்கள் அனைவரும் இல்லாமல் என்னுடைய இந்த மறக்கமுடியாத பயணம் நிறைவேறியிருக்காது. ஏற்ற தாழ்வுகளில் என் பக்கத்திலேயே இருந்ததற்கு நன்றி. உங்கள் ஊக்குவிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.” என தெரிவித்திருந்தார்.