Jayant Yadav: ஜெயந்த் வந்தால் ஜெயமே... அன்று சதம்... இன்று விக்கெட்... வான்கடே வதம்... யார் இந்த ஜெயந்த் யாதவ்?
2016ம் ஆண்டு மும்பை வான்கடேவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இங்கி.,க்கு எதிராக சதம் அடித்த 13வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இதில், 3 டி20 போட்டிகளையும் வென்ற இந்திய அணி, அடுத்த நடந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது.
கவனிக்க வைத்த ஜெயந்த்
நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இந்நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியது இந்திய அணி. போட்டி தொடங்கிய 45 நிமிடங்களுக்குள் ஜெயந்த யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெடுகள் விழ, கடைசியாக அஷ்வின் பந்துவீச்சில் 10வது விக்கெட் விழுந்து போட்டியையும், தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.
Jayant Yadav ensuring it's a 𝑽𝑬𝑹𝒀 good morning for #TeamIndia fans! 😇
— Star Sports (@StarSportsIndia) December 6, 2021
Drop some 👏👏 for his phenomenal bowling.#BelieveInBlue #INDvNZ pic.twitter.com/JngBDQgbVG
யார் இந்த ஜெயந்த்?
ஹரியானாவைச் சேர்ந்த ஜெயந்த் யாதவ், தனது 21 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடிய அவர், கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் 211 ரன்கள் எடுத்தபோது கிரிக்கெட் வட்டாரத்தின் கவனத்தை பெற்றார். அவரது பேட்டிங் கவனிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம், அதே ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் அறிமுகம். இதுவரை அந்த அறிமுக போட்டியில் விளையாடியதே அவர் விளையாடிய ஒரே ஒரு நாள் போட்டி.
மும்பை வான்கடே மைதானம் ஜெயந்த் யாதவுக்கு ஸ்பெஷல். 2016-ம் ஆண்டு மும்பை வான்கடேவில் இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த 13வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமின்றி, 9வது பேட்டராக களமிறங்கி சதம் கடந்து அசத்தினார். அந்த போட்டியில் கோலியுடன் பார்டனர்ஷிப் நின்ற ஜெயந்த், 241 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். இந்த போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனிக்கத்தக்க இடத்தைப் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, அடுத்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போனார்.
Jayant Yadav playing a test match at Mumbai. 😯 pic.twitter.com/DhkTm9P2Ah
— Umakant (@Umakant_27) December 3, 2021
இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதே வான்கடே மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் முக்கியமான 4 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உள்ளூர் கிரிக்கெட்டில் கில்லியான ஜெயந்த், மீண்டும் வான்கடேவில் சாதித்திருப்பது, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களுக்கான இடத்தில் எனக்கும் ஒரு இடம் உண்டு என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஜெயந்த்:
கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜெயந்த், அந்த சீசனில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பெரிதாக ஈர்க்காத அவர், அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்படவில்லை. டெல்லியை அடுத்து மும்பை அணி ஜெயந்த்தை ஒப்பந்தம் செய்தது. ஆனால், மும்பை அணிக்காகவும் அதிக போட்டிகளில் விளையாடவில்லை அவர். இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், கவனிக்கத்தக்க இன்னிங்ஸிங்களை விளையாடததால் ஹைலைட்டாகவில்லை.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்