800 Trailer: குடியுரிமையே இல்லாமல் கொத்தடிமையாக வந்தவன்.. உலகமே போற்றும் பெஸ்ட் பவுலர்.. வெளியானது 800 படத்தின் ட்ரெய்லர்!
முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 800 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று மும்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் வெளியிட்டனர். முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் நினைவுகூறும் வகையில் இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பது யார்?
800 படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்கும் நடிகர் யார்? இதை அறிய பலர் ஆவலாக இருந்தனர். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் முத்தையா முரளிதரனின் தோற்றத்தில் மதுர் மிட்டல் இடம்பெற்றுள்ளார்.
வெளியான ட்ரெய்லர் உங்கள் பார்வைக்கு..
800 படத்தை மூவி டிரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ளதாக தரண் ஆதர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. முத்தையா முரளிதரன், சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் 2010 வரை விளையாடினார்.
மதுர் மிட்டல் யார்?
ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்தவர் மதுர் மிட்டல். இவர் மில்லியன் டாலர் ஆர்ம், கஹின் பியார் ந ஹோ ஜயே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
800 எழுதி இயக்கியவர் எம்.எஸ். ஸ்ரீபதி செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் முரளிதரன் எப்படி வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறினார் என்பது ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான 800 இல் காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால், விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இவர் இந்த படத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.
விஜய் சேதுபதி வெளியேறியபோது இதுகுறித்து அறிக்கையை வெளியிட்ட முரளிதரன், “விஜய் சேதுபதி ஒரு சிலரிடமிருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். என்னைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களால் அவரைப் போன்ற பிரபல நடிகருக்கு பிரச்சனைகள் வருவதை நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதிக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. எனவே, இந்த வாழ்க்கை வரலாற்றில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல் நியமிக்கப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் படமாக்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கர்:
இலங்கை அணியின் ஜாம்பவானாக பார்க்கப்படும் முத்தையா முரளிதரன், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 13 முறை அவுட் செய்துள்ளார். அதேசமயம் முரளிதரன் தனது கடைசி சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார் என்பது முக்கியமானது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள்:
கடந்த 1992 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். இதற்குப் பிறகு, முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 22.73 சராசரியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த காலகட்டத்தில், ஒரு இன்னிங்சில் 67 முறை 5 விக்கெட்டுகளையும், 22 முறை ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனையை முரளி படைத்துள்ளார். இது தவிர, முரளிதரன் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.