Untold Stories Episode 16: தடை அதை உடை...! எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால்..!
விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
போராட்டத்திற்கும், வலிமைக்கும், வெற்றிக்கும் மறுபெயராக வலம் வருபவர்கள் பெண்கள். தொழில்நுட்பம் மேலோங்கிய தற்காலத்திலே பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக போராட வேண்டிய சூழலில் 1980-களில் அவர்களின் சூழல் குறித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், படிப்புக்கே தடையாக நின்ற குடும்பத்தினரை எதிர்த்து இமயத்தையே ( எவரெஸ்ட்) தன் காலடிக்கு கீழ் கொண்டு வந்த முதல் இந்திய பெண்தான் பச்சேந்தரி பால்.
கல்விக்கு போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாஷி மாவட்டத்தில் நகுரி கிராமத்தில் 1954ம் ஆண்டு பிறந்தவர் பச்சேந்ரி பால். சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் பிறந்த பச்சேந்திரி பால் பிறந்தபோது, அவர் வாழ்ந்த தேசத்திற்கு முழு சுதந்திம் கிடைத்திருந்தது. ஆனால், பெண்களுக்கு சுதந்திரம் என்பது முழு அளவில் கிடைக்கவில்லை. பச்சேந்திர பாலுக்கு பள்ளிக்கல்வி என்பது கூட எட்டாத கனியாக இருந்தது. ஆண்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றபோது, மிக கடினமான போராட்டத்திற்கு பிறகு பச்சேந்திரி பால் பள்ளிக்கு சென்றார்.
பச்சேந்திர 10ம் வகுப்பு வரை மட்டுமே படிப்பார் என்று அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால், பச்சேந்திரி மிகவும் சிறந்த மாணவியாக வலம் வந்ததால் அவருக்கு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிட்டியது. டேராடூனில் பி.எட். மற்றும் எம்.ஏ. பட்டம் பெற்றார். தன்னுடைய படிப்புக்கு நல்ல வேலை கிடைத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை மாறும் என்று பச்சேந்திரிபால் நினைத்தார்.
வாழ்வை மாற்றிய மலையேற்றம்
ஆனால், மலையேற்றத்திற்கான நேரு இன்ஸ்டியூட் கல்லூரி முதல்வர் பச்சேந்திரிபாலின் வாழ்க்கையை மாற்றினார். சிறுவயது முதலே பச்சேந்திரி வளரும்போது ஏராளமான மலையேறும் வீரர்கள் அவரது கிராமத்தை கடந்து செல்வதை பார்த்துள்ளார். அதுமுதல் பச்சேந்திரிக்கும் மலையேற்றத்தின் மீது ஆர்வமும், காதலும் அவரையும் மீறி பிறந்தது. தொழில்முறை மலையேற்ற வீராங்கனையாக மாறப்போகிறேன் என்று பச்சேந்திர பால் கூறியபோது அவரது குடும்பத்தினர் மிகவும் கடுமையாக எதிர்த்தனர்.
அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் முதல் இந்திய கலப்பு பாலினக்குழு தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பல்வேறு சோதனைகளை கடந்து நின்ற பச்சேந்திரி பாலுக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அற்புதமான வாய்ப்பாக அந்த குழுவில் வாய்ப்பு கிட்டியது.
முதல் இந்திய பெண்
எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற முதல் இந்திய கலப்பு பாலினக்குழு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது. இதில் முதலில் சென்ற குழுவில் பச்சேந்திரிபால் இடம்பெற்றிருந்தார். இலக்கை நோக்கி அடைவதற்காக 24 ஆயிரம் அடி உயரத்தில் பச்சேந்திரி சென்ற குழுவினர் முகாம் அமைத்திருந்தனர். அப்போது, கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், முகாமில் இருந்த பலரும் காயமடைந்தனர். பச்சேந்திரிபாலும் காயமடைந்தார்.
மலையேற்ற வீரர்கள் ஓரளவு தேறிய பிறகு பயணத்தை தொடர தயாரா? என்று கேட்கப்பட்டபோது பச்சேந்திரி பால் சற்றும் யோசிக்காமல் சரி என்று கூறினார். மரணத்தின் அருகே வரை சென்று வந்த பிறகும் இலக்கை மட்டுமே நோக்கமாக கொண்ட பச்சேந்திரியை பார்த்து குழுவின் பிற வீரர்கள் ஆச்சரியமடைந்தனர்.
1984ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி தன்னுடைய பிறந்தநாளுக்கு முந்தைய நாள் எவரெஸ்ட் சிகரத்தை தனது காலடிக்கு கீழே கொண்டு வந்து. உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற மகத்தான வரலாற்றுச்சாதனையை படைத்தார் பச்சேந்திரிபால். இந்த மகத்தான சாதனையை படைத்த பச்சேந்திரி பாலுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன.
விருதுகள்
அடுத்தாண்டே எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற மகளிர் அணியை வழிநடத்திச் சென்றார். 1994ம் ஆண்டு ஹரித்வாரில் இருந்து கொல்கத்தா வரை பெண்கள் மட்டுமே சென்ற ராப்டிங் பயணத்தை வழிநடத்தினார். அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சியாச்சின் வரை 2500 கி.மீ. வரையிலும், 4500 கி.மீ. நீளத்திற்கு இமயமலைப் பயணத்திற்கான முழு பெண் குழுவையும் வழிநடத்தினார். சமீபத்தில்கூட, 2018ம் ஆண்டு கங்கை நதிக்கரையில் 40 நபர்களுடன் இணைந்து 55 ஆயிரம் கிலோகிராம் குப்பைகளை அகற்றினார்.
பச்சேந்திரி பாலின் சாதனையை பாராட்டி 1986ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1994ம் ஆண்டு அர்ஜூனா விருதும், தேசிய அட்வென்ஞசர் விருது மற்றும் 2019ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் இந்திய அரசு வழங்கி கவுரவித்தது. உத்தரகாண்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகிலே உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தனது காலடிக்கு கீழே கொண்டு வந்த பச்சேந்திரி பால், தடைகளை தாண்டி வெற்றி பெற பல பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
மேலும் படிக்க : Untold Stories Episode 15: குடிசையில் பிறந்த கோபுரம்..! தடைகளை கடந்து சாதித்த தமிழக சிங்கப்பெண்...!
மேலும் படிக்க : Untold Stories 14: மும்பை முதல் ஒலிம்பிக் வரை..! இந்தியாவின் முதல் தடகள லேடி சூப்பர் ஸ்டார்!