Asian Games: ஆசிய போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; இடம்பிடித்த 3 தமிழ்நாட்டு சிங்கப் பெண்கள்
19வது ஆசிய போட்டிகளுக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சவுமியா, இந்துமதி மற்றும் சந்தியா என மூன்று வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ம் தேதி துவங்கி அக்டோபர் 6-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 போட்டிகள் ஒவ்வொரு கட்டமாக நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு ஏற்கனவே பரிந்துரை செய்து இருந்தது.
இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளில் பங்கேற்கும் 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்திய மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 22 பேர் கொண்ட அணியை ஞாயிற்றுக்கிழமை அதாவது ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிவித்தார், இந்திய மகளிர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாலா தேவி நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய மகளிர் அணியில் 3 தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணிக்கு திரும்பியுள்ள பாலா தேவி தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கடைசியாக காத்மாண்டுவில் நடைபெற்ற 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தேசிய அணிக்காக விளையாடினார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவால் 61வது இடத்தில் உள்ள இந்தியா, சீனா (உலக நம்பர்.38) மற்றும் தாய்லாந்து (நம்பர்.46) ஆகியவற்றுடன் B குழுவில் இணைந்துள்ளது.
போட்டியில் பதினேழு அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்த 17 அணிகளும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். குழுக்கள் A, B மற்றும் C தலா மூன்று அணிகளைக் கொண்டிருக்கும், குழுக்கள் D மற்றும் E நான்கு அணிகளைக் கொண்டிருக்கும்.
இந்த முறை இந்திய மகளிர் கால்பந்து அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சவுமியா, இந்துமதி மற்றும் சந்தியா என மூன்று வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி:
ஸ்ரேயா ஹூடா, அஷ்தலதா தேவி, ஸ்வீடி தேவி, ரிது ராணி, டால்மியா சிபீர், இந்துமதி கதிரேசன், அஞ்சு தமங், சௌமியா குகுலோத், தங்மேய் கிரேஸ், பியாரி சாசா, ஜோதி, ரேனு, பாலா தேவி, ஆஸ்டம் ஒரான், சஞ்சு, ரஞ்சனா சானு, சங்கீதா பாஸ்ஃபோர், பிரியண்கா தேவி, சவுமியா நாராயணசாமி, பந்தோய் சானு, மனிஷா மற்றும் சந்தியா ரங்கநாதன் ஆகிய 22 பேர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.