Vinayagar Chaturthi 2023: சேலத்தில் தென்னந்தோப்புக்குள் 13 அடி தேங்காய்க்குள் விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்னம் தோப்புக்குள் 13 அடி உயரமுள்ள தேங்காய் உள்பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் 2,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செவ்வாய்ப்பேட்டை எலைட் அசோசியேசன் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு விதமான வடிவில் விநாயகர் வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்னம் தோப்புக்குள் 13 அடி உயரமுள்ள தேங்காய் உள்பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுப் பகுதியில் இரு புறமும் தென்னை ஓலைகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தேங்காய்களை வைத்து அலங்கார வளைவுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வடிவிலான விநாயகரை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவிலில் காலை 4 மணி முதல் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ராஜ கணபதிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு முதல் தமிழ் மாதங்களில் முதல் நாள் அன்று ராஜகணபதி கோயிலில் உள்ள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தெருக்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் இல்லாமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சேலம் எல்லை பிடாரியம்மன் கோயில் அருகே தொடங்கி வின்சென்ட், அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி வழியாக கன்னங்குறிச்சி ஏரி சென்றடையும். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதேபோல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை தரிசனம் செய்ய வந்த பொதுமக்களுக்கு இயற்கை மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இயற்கையை பாதுகாக்கும் விதமாகவும், இயற்கை மருத்துவ முறையை மக்கள் தங்கள் வீடுகளிலேயே மரங்களாக வளர்த்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மூலிகை மரக்கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மரக்கன்றுகளை தங்கள் வீட்டிற்கு வாங்கி சென்றனர்.