விநாயகர் சதுர்த்தி: சென்னையில் பிரம்மாண்ட சிலைகள்! 42 அடி பித்தளை விநாயகர் முதல் மளிகை பொருள் விநாயகர் வரை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி ;
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வட இந்தியாவிற்கு நிகராக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகளும் , வழிபாடுகளும் தொடங்கிவிட்டது. குறிப்பாக, புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் , பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடுகளிலும் களிமண்ணாலான சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெரிய சிலைகள் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
42 அடி உயர பித்தளை தட்டு தரணி விநாயகர் சிலை
செனனை கொளத்தூர் பூம்புகார் நகர் சாலை சந்திப்பில் இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் சார்பில் 42 அடி உயரமுள்ள தரணி விநாயகர் சிலைக்கு 2,300 எண்ணிக்கையுள்ள பித்தளை தட்டுகளும் விநாயகரின் கிரீடத்திற்கு 1500 குங்கும சிமிழ் தட்டுகளும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் காட்சிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் விநாயகரை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் தலைவர் பால்ராஜ் செயலாளர் மணிகண்டன் , வெங்கடேசன் , முத்து , உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
2001 வெள்ளி காயினால் உருவான வெள்ளி விநாயகர்

சென்னை பெரவள்ளூர் பகுதியில் , ஸ்ரீ கணேச டிரஸ்ட் சார்பில் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் 1 கிராம் எடை கொண்ட 2 கிலோ வெள்ளி விநாயகர் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளி விநாயகரானது , 5 1/2 அடி உயரம் கொண்டது. இந்த வெள்ளி விநாயகரை பொது மக்கள் ஆர்வத்தோடு வழிபாடு செய்தும் புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
வெள்ளை எருக்கஞ்செடி வேர் விநாயகர்

சென்னை கொளத்தூர் மூகாம்பிகை சந்திப்பில் 42 அடி உயரத்தில் , 28 அடி அகலம் கொண்ட அளவில் வெள்ளை எருக்கஞ்செடி வேர் விநாயகர் வைக்கப்பட்டுள்ளது.
மளிகை பொருள் விநாயகர்

சென்னை திரு.வி.க நகர் கென்னடி ஸ்கொயர் பகுதியில் , உப்பு , புளி , மசாலா பொருட்களை உள்ளடக்கிய , 15 அடி உயரம் மற்றும் 500 கிலோ எடை கொண்ட மளிகை பொருள் விநாயகர் வைக்கப்பட்டுள்ளது.




















