எம பயம் நீக்கும் தலமாக விளங்கும் திருசக்கராப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் கோயில்
சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாக மாறிய பிரம்மா இத்தலம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் நீரால் இறைவனை வழிபட்டு தன் சுய உருவை திரும்பப் பெற்றார்.
தஞ்சாவூர்: எம பயம் நீக்கும் தலமாகவும், பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 17-வது தலமாக உள்ளது திருசக்கராப்பள்ளி. இத்தலம் தற்போது அய்யம்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூருக்கு அருகில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பெயர் சக்ரவாகேஸ்வரர், இறைவி தேவநாயகி என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் அய்யம்பேட்டையில் இத்தலம் அமைந்துள்ளது. கோயில் இருக்கும் பகுதி சக்கராப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் சக்கரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
திருச்சக்கராப்பள்ளி (சக்கரமங்கை) பாடல் பெற்ற தலம் என்பது மட்டுமின்றி, சப்தமங்கைத் தலங்கள் என்று போற்றப்படும் 7 தலங்களில் ஒரு தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கை தலங்கள் ஆகும். பிராமி வழிபட்ட தலம் சக்கராப்பள்ளி. மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால், இத்தலம் திருசக்கராப்பள்ளி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாக மாறிய பிரம்மா இத்தலம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் நீரால் இறைவனை வழிபட்டு தன் சுய உருவை திரும்பப் பெற்றார். சக்கரவாகப் பறவை வழிபட்டதால், இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.
கிழக்கு நோக்கியுள்ள இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே சுதைச் சிற்பங்களாக சிவன், பார்வதி, மற்றும் விநாயகர், முருகன் உள்ளனர். ஆலயத்தில் கொடிமரம் இல்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும், பிராகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி தனி கோவிலாக கோயில் வளாகத்தின் பின்புறம் அமைந்துள்ளது.
கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சந்நிதி, தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறர். கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிராகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மகா மண்டப வெளிச்சுவரில் புடைப்புச் சிற்பங்களாக சக்கரவாகப் பறவையும் பிராம்மியும் இறைவனைப் பூஜிக்கும் தல புராண நிகழ்ச்சி அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்திலுள்ள முருகப் பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமானின் முன்புறம் மயில் உள்ளது.
சண்டேஸ்வரருக்கு எதிரே காட்சி தரும் துர்க்கை, சிவ துர்க்கையாக காட்சி தருகிறாள். கையில் திரிசூலம் ஏந்தி அஷ்டபுஜங்கள் கொண்டு காட்சி அளிக்கும் இந்த துர்க்கையை வழிபடுவதன் மூலம், எமபயம் நீங்குவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், எம பயம் நீக்கவல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்தக் குண்டத்தில் குங்கிலயப் பொடி தூவி வழிபடுகின்றனர்.