Thiruppavai 6: மார்கழி 6வது நாள்...6வது பாடல்; பறவைகள் எழுப்பும் ஓசை கேட்கவில்லையா..? தோழியை எழுப்பும் ஆண்டாள்...
Margali 2022: மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் திருப்பாவை இயற்றியுள்ளார்.
மார்கழி மாதத்தில், இத்தனை நாட்கள் கண்ணனின் பெருமைகளை சொல்லி, அதன் மூலம் நல்ல நெறிகளை குறிப்பால் உணர்த்தி வந்த ஆண்டாள், இன்றைய மார்கழி ஆறாவது நாளில், ஆறாவது பாடல் முதல் இன்றிலிருந்து வீடு வீடாகச் சென்று, தோழிகளை எழுப்புவது போன்ற பாடலை உருவாக்கியுள்ளார்.
அவர் எப்படி எழுப்புகிறார் என்றால்,
பறவைகள் எழுந்து எழுப்பும் ஓசை கேட்கவில்லையா..
பெருமாள் கோயிலில் ஒலிக்கும் சங்கு ஒலி கேட்கலையா…
அரி என்ற நாமத்தை சொல்லி முனிவர்களும் எழுந்துவிட்டனர்....
இதை உணர்ந்தாவது, நீ எழ வேண்டாமா என்கிறார். மேலும், எழும்போது தடால் புடாலென்று எழுந்திருக்க வேண்டாம், பொறுமையாக எழுந்திரு என்று உணர்த்துகிறார்.
இதையடுத்து, தோழி ஒருத்தியை எழுப்பி, இரு தோழிகளும் சேர்ந்து மற்ற தோழிகளை எழுப்ப அவர்களது வீட்டுக்கு செல்கின்றனர்.
திருப்பாவை பாடல் 6:
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய்; பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள எழுந்தங் கரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
இதையும் படிக்க:Thiruppavai 5: மார்கழி 5ஆம் நாள்... 5வது பாடல்... தாய்க்கு பெருமை சேர்த்தவரை வணங்கினாலே... ஆண்டாள் சொல்வது என்ன?.....
இதையும் படிக்க: Margazhi 2022: மார்கழி முதல் நாள்.. முதல் பாடல்.. ஒரு கண்ணில் சூரியன், மறு கண்ணில் நிலவு... போற்றி பாடும் ஆண்டாள்