(Source: ECI/ABP News/ABP Majha)
வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு; பரவசத்தில் பக்தர்கள் - எங்கு தெரியுமா?
சின்னமனூர் அருகே வருடத்திற்கு ஒரு முறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குல தெய்வ வழிபாடு
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் விசேசமான மிகவும் பிரிசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள குல தெய்வ வழிபாடு என்பது அப்பகுதிகளில் பல்வேறு சிறப்புகளும் தனித்துவத்தையும் பெற்றுள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்படும். எடுத்துக்காட்டாக மதுரை அழகர் கோவில் திருவிழா, தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா, தேனி வீரப்ப ஐயனார் திருக்கோவில் என பல்வேறு கோவில்கள் உள்ளது.
சித்ரா பெளர்ணமி நிகழ்வு
குறிப்பக சித்ரா பெளர்ணமி நாளன்று ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வ வழிபாட்டை அடிப்படையாக கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டுமல்லாமல் அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களிலும் குலதெய்வ வழிபாடு என்பது நடந்து வருகிறது. இந்த சூழலில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் தனி ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் அம்மன் தேனி மாவட்டம் வருச நாடு பகுதியில் உள்ள கொம்பு குத்தி ஐயனார் கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் உறவு முறை தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஐயனார் அண்ணனாகவும் சூடம்மாள் தங்கையாகவும் இருந்து குல தெய்வங்களாக அருள் பாலித்து வருகின்றனர்.
சிறப்பு பூஜைகள்
புரட்டாசி மாதத்தில் இக்கோவிலில் பங்காளிகள் ஒன்றுகூடி அம்மனுக்கு கரகம் எடுத்து பூஜை பெட்டி அலங்கரித்து திருவிழா கொண்டாடுவது வழக்கம். இக்கோவிலில் நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜ கோபுரம் எழுப்பப்பட்டது. அதன் பிறகு கும்பாபிஷேக விழாவும் நடத்தப்பட்ட நிலையில் அந்த வருடத்திலிருந்து, வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி வார நாட்களில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருட சித்ரா பௌர்ணமி விழா வார நாட்களான இன்று சூரிய ஒளி அம்மன் மீது படும் அரிய வகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரிய ஒளி அம்மனை வழிபடும் நிகழ்வு
அம்மனின் தலை உச்சியில் படும் சூரிய ஒளிக்கதிர் மெல்ல மெல்ல நகர்ந்து கால், பாதம் வரை இடம் பெறும். இந்த அரிய வகை நிகழ்ச்சியை பக்தர்கள் மெய் மறந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமான பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடந்து சாமிக்கு அதிகப்படியான பூக்கள் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக சூரிய ஒளிபடும் நேரங்களில் வேண்டிய வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றித் தருவதாக கலந்து கொண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னதானத்தை வழங்கினார்கள்.