Sathaya Vila 2024: மாமன்னர் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா; தஞ்சை பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்
Thanjavur Sathaya Vila 2024: கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
காவிரி தென்கரையில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோயில்
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா
இத்தகைய பெருமை வாய்ந்த பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் நவம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூடிய நாளான ஐப்பசி சதய நாளை, ஆண்டுதோறும் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் வரும் 9ம் தேதி காலை தொடங்குகிறது. அன்று மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து, பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
சதய விழா நிகழ்ச்சிகள் விபரம்
சதய விழா நாளான வரும் 10ம் தேதி காலை மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறைத் திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு அபிஷேகம், பிற்பகல் பெருந்தீப வழிபாடு, மங்கல இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இன்று பந்தக்கால் முகூர்த்த விழா
இந்த சதய விழா முன்னிட்டு பெரிய கோயிலில் இன்று பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது. இதில் பந்தக்காலிற்கு சந்தனம், தயிர், பால், திரவிய பொடி உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.
விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி . மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், வெற்றி தமிழர் பேரவை இரா. செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.