Thai Amavasai 2025: தை அமாவாசையில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன தெரியுமா ...
Thai Amavasai 2025 : தை அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும்.

தை அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும்.
பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள தை மாதத்தில் வரும் அமாவாசை (Thai Amavasai) முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2025-ம் ஆண்டில் தை அமாவாசை எப்போது வருகிறது, சிறப்புகள் என்ன, ஏன் முக்கியமானது ஆகியவற்றை பற்றி காணலாம்.
தை அமாவாசை 2025:
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. திதி கொடுக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு தை அமாவாசை முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.
தை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளான கடல், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுப்பது மிகுந்த நண்மை பயப்பதாகும். அப்படி நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சேர்ந்து விடலாம்.
இதையும் படிங்க: காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் பலி!
அமாவாசை திதி செய்ய உகந்த நேரம் :
இந்த ஆண்டில் ஜனவரி 29-ஆம் தேதி தை அமாவாசை வருகிறது. குறிப்பாக, 28-ஆம் தேதியிலிருந்து அமாவாசை நேரம் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் 7:20 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு காலை 9 மணி முதல் 11:55 மணி வரைக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
செய்யக்கூடியவை: தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.அன்றைய தினம் வீட்டின் வாசலின் கோலாமிடுதல் கூடாது.
தர்ப்பணத்தின் பலன் :
தர்ப்பணம் தருவதால் முன்னோர்களின் ஆசைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த திருமணம் தடை, குழந்தை பாக்கியம் என அனைத்தும் நீங்கி குறிப்பாக பித்ரு தோஷம் நீங்கி அவர்கள் மோட்சம் அடைந்து நமக்கு நன்மையை செய்வார்கள் என்பது ஐதீகம்.
தை அமாவாசை தர்பணம், விரதம்:
தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரதம் இருப்பது, புனித ஆறுகளில் நீராடுவது, கோயில்களில் வழிபாடு செய்வது, விளக்கேற்றுவது என முன்னோர்களின் நினைவாக அவர்களுக்கு உங்கள் அன்பை, மரியாதையை வெளிப்படுத்துவதுபோல வழிபாடுகளை செய்யலாம்.

