சனிப்பெயர்ச்சி தேதியை அறிவித்தது திருநள்ளார் கோவில் நிர்வாகம் - எப்போது தெரியுமா ?
2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என, பஞ்சாங்கம் வாசித்து, திருநள்ளாரில் சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி: காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என, பஞ்சாங்கம் வாசித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சனிப்பெயர்ச்சி என்பது சனி பகவான், அதாவது சூரியக் குடும்பத்தில் ஆறாவது கிரகமான சனி, ராசி அடையாளத்தை மாற்றுவது ஆகும். சனியின் பெயர்ச்சி, அதன் இயல்பான சுழற்சி மூலம், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது, அதன் மூலம் ஒவ்வொரு ராசிக்கும் சனி பகவானின் பலன்கள் மாறும்.
காரைக்கால், திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.
சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து, அறிவித்தனர். சிவாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?
சனி பகவான் சூரியனைச் சுற்றி வர 29.45 ஆண்டுகள் அதாவது சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நீண்ட கால சுழற்சி காரணமாக, சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதற்கு ஏறத்தாழ 2.5 ஆண்டுகள் ஆகும். சனி தனது சுற்றுப்பாதையில் மெதுவாக நகர்வதால், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறும் இந்த நிகழ்வு தான் சனிப்பெயர்ச்சி எனப்படுகிறது.
சனிப்பெயர்ச்சியின் முக்கியத்துவம்
சனிப்பெயர்ச்சி என்பது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. சனி, நல்ல மற்றும் கெட்ட பலன்களை வழங்கும் ஒரு கிரகம் என்பதால், ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சி ஏற்படுத்தும் பலன்கள் கவனிக்கத்தக்கவை. ஏழரை சனி, அஷ்டம சனி, போன்ற சனி பகவானின் தனிப்பட்ட பலன்களும் இந்த பெயர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகின்றன.





















