சேலம் சாஸ்தா கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாஸ்தா கோயிலில் குருசாமி முன்னிலையில் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஒன்றாகும். தமிழ் மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் திருக்கோயில் நடை திறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஐயப்பனுக்கு உகந்த மாதமாகிய கார்த்திகை மாதம் துவங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20 ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்காக கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். இந்த நிலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வார்கள்.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் குரங்குசாவடி பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா ஆலயத்தில் மாலை அணிவிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. முன்னதாக ஐயப்பனுக்கு பால், இளநீர், நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு வண்ண வாசனை மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லட்சார்ச்சனை செய்யப்பட்டு நம்பூதிரி வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை 6 மணி முதல் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாஸ்தா கோயிலில் குருசாமி முன்னிலையில் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர். மாலை குருசாமி அணிவிக்கும் போது சாமியே சரணம் ஐயப்பா என கோஷங்களை அனுப்பியவாறு மாலை அணிவித்துக் கொண்டனர். விரதமானது 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு அதன் பின்னர் சபரிமலை ஐயப்பனை காண யாத்திரை செல்வார்கள். ஒரு சில ஐயப்ப பக்தர்கள் 15 நாட்கள் எனவும் ஒரு மாதம் என விரதம் இருந்து ஐயப்பனை காண செல்வார்கள். சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாஸ்தா கோயிலில் தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று சேலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் கார்த்திகை ஒன்றாம் தேதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் மக்கள் பெருமளவில் திரண்டு முருகரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கார்த்திகை ஒன்றாம் தேதியை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சேலம் ராஜகணபதி திருக்கோயிலில் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.