Navratri 2022: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியுமா...?
Navratri 2022: இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது.
நடப்பாண்டிற்கான நவராத்திரி(Navratri 2022 Date) செப்டம்பர் 26-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை கொண்டாப்படுகிறது. இதற்காக இப்போது முதல் கொழு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள், கொழு பொம்மைகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் 9வது நாள் ஆயுத பூஜையாகவும், 10வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் பண்டிகையான நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். புராண காலத்தில் வரமுனி என்றொரு மகாமுனி இருந்தார். தவத்தில் சிறந்து விளங்கிய வரமுனிக்கு, தான் என்ற கர்வமும், ஆணவமும் இருந்தது. இதன் காரணமாக, முனிவர் மகிஷனாக மாறினார். மகிஷனாக மாறிய வரமுனியால் தேவலோகத்தில் ஏராளமான இன்னல்கள் ஏற்பட்டது.
இதனால், தேவலோக அதிபதியான இந்திரன் உள்பட தேவர்கள் அனைவரும் இன்னல்களை சந்தித்தனர். இதையடுத்து, இந்திரன் பிரம்மதேவரை சந்தித்தார். பின்னர், சிவபெருமானிடம், மகாவிஷ்ணுவிடமும் சரண் அடைந்தார். வரமுனி மகிஷாசுரனாக மாறிய பிறகு, அவர் பெற்றிருந்த வரத்தின்படி, மகிஷாசுரன் எந்த பெண்ணை மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும்.
மகிஷாசுரனின் வதம் செய்வதற்காக துர்காதேவி அசுரனைத் தேடி அவனது இடத்திற்கு சென்றாள். அங்கு துர்காதேவியின் அழகை கண்ட மகிஷாசுரன் மோகித்தான். தன்னை மணந்து கொள்ளும்படி துர்காதேவியிடம் வேண்டினான். மகிஷாசுரனிடம் யுத்தத்தில் என்னை வீழ்த்தினால் திருமணம் செய்து கொள்வதாக துர்காதேவி நிபந்தனை விதித்தாள். ஒன்பது நாட்கள் நடைபெற்ற யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரனை துர்காதேவி வதம் செய்தார். மகிஷாசுரனை தேவி வதம் செய்த பிறகு, தேவர்கள் மற்றும் ரிஷிகள் பூமாரி பொழிந்தனர்.
மகிஷாசுரன் தலையில் ஏறி நின்ற துர்காதேவி, மகிஷனாக வந்த வரமுனிக்கம், தேவர்களுக்கும் திருவருள் புரிந்தார். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய துர்காவின் மகாத்மியத்தை போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடுவார்கள். நவராத்திரி நிகழ்வுகளை எல்லாம் கொலு பொம்மைகளாக வைத்து வழிபட்டு வருகின்றனர்.