Mayiladuthurai: மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா; பந்தக்கால் முகூர்த்ததுடன் தொடக்கம்
பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரிய கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருவாவடுதுறை ஆதீனம் முடிவெடுத்து திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. தற்போது திருப்பணிகள் நடைபெற்று நிறைவேற்ற நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் வருகிற செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்தையொட்டி அபயாம்பிகை அம்பாள் மற்றும் மாயூரநாதர் சுவாமிக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பூஜைகளை திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிராயன் சுவாமிகள் முன்னிலையில், சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.
இதில் முகூர்த்த பந்தகாலுக்கு, பால் பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலை சுற்றி வலம் வந்து பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.