Thiruchendur : திருச்செந்தூர் முருகன் சாட்சியாக ஒரு பைசா கூட தனியார் நிறுவனத்திடம் கேட்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் கார் பாஸ்கள், விஐபி பாஸ்கள் குறைக்கப்பட்டு, ஏழை, எளிய பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25- தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
அவர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகள், கோவில் உள்பிரகாரங்கள், கார் பார்க்கிங், கழிப்பிட வசதிகள் அமைக்கும் இடங்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்
பின்னர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, கந்தசஷ்டி விழாவில் விரதமிருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 18 இடங்களில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்படவுள்ளது. 380 கழிப்பிடங்களும், 81 இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், 19 இடங்களில் மருத்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 இடங்களில் எல்.இ.டி திரைகளும் வைக்கப்பட்டு கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்படும்.
31 இடங்களில் கண்காணிப்பு கோபுரமும், 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையமும், கடலில் நீராடும் பக்தர்களை பாதுகாக்க 15 கடல் பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருப்பவர்கள். கடற்கரையில் 3 டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்யப்படும். 2700 போலீசார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்படுவார்கள்.
கோவில் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 650 பேர் சுகாதாரப்பணியில் ஈடுபடுவர். குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் மின்சார வசதிகளை கண்காணிக்க ஒவ்வொரு துறைக்கும் என இணை ஆணையர்கள் நியமிக்கப்படவுள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் அனைத்து துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தங்கத்தேரில் சிறு சிறு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்திட்ட வளாகப்பணிகளும் தற்போது நடைபெறுவதால் தங்கத்தேர் உலா குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்கப்படும்.
பக்தர்கள் தரிசனம் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நடைமுறைகளை இந்தாண்டு மாற்றியமைத்துள்ளோம் என்றார்.
பின்னர், பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி மறுப்பது குறித்து கேட்ட போது, பாரம்பரியம் என்பது ஒன்று, அதே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் முக்கியமா? அல்லது 400 நபர்கள் மட்டும் கோவில் உள்ளே 6 நாள்களும் தங்குவது முக்கியமா? கோவில் உள்ளே பக்தர்கள் இரவு, பகலாக தங்குவதால் ஏற்படும் சிறு சிறு சுகாதார கேடுகளால் கோவில் தூய்மை பாதிக்கப்படுகிறது. மேலும் விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தரமான முறையில் கோவில் வளாகத்தில் பந்தல்கள் அமைக்கப்படுகிறது.
50, 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறை வேறு. அப்போது வந்த பக்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாகத்தான் கோவில் உள்ளே பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த ரூ. 300 கோடியிலான பெருந்திட்ட வளாகப்பணியை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் செயல்பட்டு வருகிறது. இந்தப்பணியை விரைந்து முடிப்பதற்கு இறையன்பர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தனியார் நிறுவனம் ஒன்று கோவிலில் திருப்பணி செய்ய அவர்களுடைய பங்குத்தொகை 200 கோடி. இந்து சமய அறநிலையத் துறையின் பங்கு 100 கோடி. மொத்தம் 300 கோடியில் இத்திருப்பணி செய்யப்படுகிறது. தனியார் யார் திருப்பணி செய்தாலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அவர்கள் தான் அந்த திருப்பணியை மேற்கொள்வார்கள். பணியின் நேர்த்தி, திட்டத்தின் கட்டமைப்பு மட்டும் சரியாக வருகிறதா? என்பதை பார்ப்பது மட்டும் தான் அரசின் பணி.
தனியார் தங்களது சொந்தப்பணத்தில் திருப்பணி செய்வதற்கு அரசுக்கு ஏன் கமிஷன் தர வேண்டும்? இந்த திட்டத்தில் எந்தெந்த பணிக்கு எவ்வளவு தொகை என்பதை இணையத்தில் வெளியிடபட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்ற பின் தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலகமே திரும்பி பார்க்கும் ஒரு சிறப்பான திட்டமாக அமையும். இப்பணி முதல்வரின் புகழுக்கு புகழ் சேர்க்கும். இதை எப்படியாவது இடையூறு செய்து, இப்பணியின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அவதூறுகள் கிளப்பி விடப்படுகின்றன. சுவாமி அய்யப்பன், சுவாமி முருகன் சாட்சியாக ஹெச்.சி.எல். நிறுவனத்திடம் ஒரு பைசா கூட கேட்கவில்லை. இந்த ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் கார் பாஸ்கள், விஐபி பாஸ்கள் குறைக்கப்பட்டு, ஏழை, எளிய பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.