பிறந்தது கார்த்திகை மாதம்... எழுந்தது ஐயப்ப சரண கோஷம்: மாலை அணிந்த பக்தர்கள்
சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எழுப்பினர்.
தஞ்சாவூர்: கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி சபரி மலை வாசா... சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்துடன் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்தனர்.
கார்த்திகை மாதம் என்றாலே விழாக்கோலம்தான்
கார்த்திகை மாதம் என்றாலே தீபத்திருவிழாவும், சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் சரண கோஷமும்தான் நினைவிற்கு வரும். சூரிய பகவான், விருச்சிக ராசியில் சஞ்சரிக்க துவங்கும் மாதம் கார்த்திகை மாதமாகும். இது வழிபாடு, கொண்டாட்டம், விழாக்கள் நடத்துவதற்கான மாதமாக கருதப்படுகிறது. அதனால் தான் அதிகமான விரதங்கள் வரும் இந்த மாதத்தில் சுபமுகூர்த்த தினங்களும் அதிகம் உண்டு. பூமியும் சரி, வாழ்க்கையும் சரி வளம் பெற செய்யும் மாதம் கார்த்திகை மாதமாகும்.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் இன்று 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை உள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை மாதம் துவங்குவதே மிகவும் சிறப்புக்குரிய, பக்தி மயமான சூழலுடன் துவங்குகிறது. வழக்கமாக கார்த்திகை மாதத்தை ஐயப்ப சுவாமி மாதம் என்றே குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமின்றி சிவ பெருமான் மற்றும் முருகப் பெருமானின் பக்தர்களுக்கும் சிறப்புக்குரிய நாளாக அமைந்துள்ளது.
அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கோயில்கள், ஆறுகள், அருவிகளில் நீராடிவிட்டு பல்வேறு கோயில்களில் குருசாமி தலைமையில் துளசி மாலை அணிந்தனர். அபிஷேக பிரியனே... ஆனந்த ஜோதியே சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் விண்அதிர எதிரொலித்தது.
குருசாமிகள் மாலை அணிவித்தனர்
சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எழுப்பினர். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் வலம் வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து இன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது.
கருப்பு, நீல நிற ஆடைகள் வாங்க குவிந்தனர்
சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்கள் கன்னி சாமிகள் ஆவார்கள். கன்னிசாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேற்று ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டை ஐயப்பன் கோயில், சாலியமங்கலம் ஐயப்பன் கோயில், திருவையாறு காவிரி படித்துறை போன்ற இடங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். அவர்களுக்கு குருசாமி மாலை அணிவித்து விரத முறைகளை எடுத்துரைத்தார்.
சரண கோஷத்துடன் கோயில்களில் வழிபாடு
பின்னர் சபரிமலை பக்தர்கள் பெரிய கோயில், மேலவீதி அய்யப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், பட்டுக்கோட்டை என பல்வேறு பகுதிகளிலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து சரண கோஷத்துடன் அப்பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.