Vaikasi Brahmotsavam 2024: காஞ்சியின் அடுத்த திருவிழா தொடங்கியது..! வைகுந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்..!
Vaikasi Brahmotsavam 2024 : காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வைகுண்ட பெருமாள் கோயில் - vaikunda raja perumal temple kanchipuram
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும். அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் குரோதி ஆண்டு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்சவம் கொடியேற்றம்
வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கொடி மரத்த அருகே எழுந்தருள செய்தனர். பின்னர் கருட ஆழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்து வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம் முழங்க கோவில் பட்டாச்சாரியார்கள் தங்க கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றி வைத்து பிரம்மோற்சவத்தை துவக்கி வைத்தனர்.
பக்தர்கள் மகிழ்ச்சி
இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி உடன் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். வைகாசி மாத பிரம்மோற்சவம் துவங்கியதை ஒட்டி இன்று முதல் நாள் தோறும் காலை,மாலை, என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் முடிந்த நிலையில், வைகுண்ட ராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் துவங்கி இருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முக்கிய உற்சவங்கள் நடைபெறும் நாட்கள்
ஜூன் இரண்டாம் தேதி - இரண்டாம் நாள் காலை அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி காட்சியளிக்கிறார். மாலை சூரிய பிரபை வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.
ஜூன் மூன்றாம் தேதி - மூன்றாம் நாள் காலை கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. மாலை அனுமன் வாகன உற்சவம் நடைபெற உள்ளது.
ஜூன் நான்காம் தேதி- நான்காவது நாள் உற்சவம் சேஷ வாகனம். மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.
ஜூன் 5-ம் தேதி- ஐந்தாவது நாள் சாலை உற்சவம் நாச்சியார் திருக்கோளத்தில் பல்லாக்கு உற்சவம், தொடர்ந்து மாலை யாளி வாகன உற்சவம் நடைபெற உள்ளது.
ஜூன் 6ஆம் தேதி -ஆறாவது நாள் உற்சவம் வேணுகோபாலன் திருக்கோளத்தில் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை வேளையில் யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஏழாவது நாள் -ஜூன் ஏழாம் தேதி எடுப்பு தேர் உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் மிக முக்கிய உச்சகங்களில் ஒன்றாக எடுப்பு தேர் விழா பார்க்கப்படுகிறது
ஜூன் 8 ஆம் தேதி எட்டாவது நாள் உற்சவம் - வெண்ணெய் தாழி கண்ணன் பல்லாக்கு மற்றும் மாலை வேளையில் குதிரை வாகனம்
ஜூன் 9 ஆம் தேதி - ஒன்பதாவது நாள் உற்சவம் பல்லாக்கு மற்றும் தீர்த்த வாரி நடைபெறுகிறது மாலை முகுந்த விமான உற்சவமும் நடைபெற உள்ளது