விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்..! அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்..!
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
108 திவ்ய தேசங்களில் 75 வது திவ்ய தேசமான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா ( Kumbhabhishekam )
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாழ்க்கை. அவ்வாறு கட்டப்படும் கோவில்களுக்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும் கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசத்தங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.
புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் ( Divyadesam Sri Ashtabujakara Perumal Temple )
கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அடுத்து மிக முக்கிய கோவிலாக இக்கோவில் விளங்கி வருகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 75 வது திருக்கோயிலாகவும் இக்கோயில் மூலவர் 8 திருக்கரங்களை உடையவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கும் உரியதாகவும் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் திகழ்கிறது.
இக்கோயில் கடந்த 9.12.2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு ஆலயம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜைகள் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேள்விகள் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தது.
ஏராளமானோர் பங்கேற்பு
இதனைத் தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் 108 கலச சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் கலசங்கள் மீது கும்பாபிஷேகம் நீர் ஊற்றிய பொழுது " கோவிந்தா கோவிந்தா " என பக்தர்கள் முழக்கமெட்டு கடவுளை வழிபட்டனர். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் பக்தர்கள் தரிசித்து சென்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மிக முக்கிய கோவிலில் கும்பாபிஷேக நடைபெற்றதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
பக்தர்களின் ஆசை நிறைவேறியது
காஞ்சிபுரத்தில் பல்வேறு பெருமாள் கோவில்கள் இருந்தாலும், சொர்க்கவாசல் திறப்பு என்பது இந்த அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மட்டுமே நடைபெறும் அந்த அளவிற்கு சிறப்பு மிக்க கோவிலாக இக்கோவில் உள்ளது. கோவில் புணரமைப்பு நடைபெற்று வந்ததால், சொர்க்கவாசல் திறப்பு நடைபெறாமல் இருந்தது. இன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற முடிந்துள்ளதால் அடுத்த ஆண்டு முதல் மீண்டும், அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.