(Source: ECI/ABP News/ABP Majha)
ஆன்மீகம்: பழனியில் உள்ள கோயில்களில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு
பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் சப்தமி உத்திர நட்சத்திர நாளில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டது.
Theni: சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கு..!
பின்னர் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்த நடராஜர்-சிவகாமி அம்மன், விநாயகர், மாணிக்கவாசகர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சண்டிகேஸ்வர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெரியநாயகி அம்மன், நடராஜர்-சிவகாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், தேவாரம், திருப்புகழ் பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 16 வகை தீபாராதனை, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதி லிங்கேசுவரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு சந்தனம், பன்னீர், விபூதி, பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்