சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
ஐப்பசி அன்னாபிஷேகம் நாளை மறுநாள் சிவாலயங்களில் நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது.
ஐப்பசி மாதம் ஏராளமான சிறப்புகள் நிறைந்த மாதம் ஆகும். நடப்பாண்டிற்கான ஐப்பசி மாதம் நாளை மறுநாளான 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஐப்பசி மாதத்தில் நடைபெறும் இரண்டு முக்கியமான விசேஷங்கள் மகா கந்த சஷ்டி திருவிழா மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகும்.
மகா கந்தசஷ்டி திருவிழா கடந்த 7ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், ஐப்பசி மாத அன்னாபிஷேகம் நாளை மறுநாள் வருகிறது. சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாக இந்த அன்னாபிஷேகம் கருதப்படுகிறது.
ஐப்பசி அன்னாபிஷேகம்:
சிவபெருமானுக்கு மற்ற மாதங்களில் 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், இந்த ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமியில் அன்னத்தால் சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஐப்பசி அன்னாபிஷேகமாக கருதப்படுகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதையே ஐப்பசி அன்னாபிஷேகம் என்று கூறுகின்றனர்.
இந்தாண்டுக்கான ஐப்பசி அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெ்னறால் வெள்ளிக்கிழமை மட்டுமின்றி அந்த நாளில் அஸ்வினி, பரணி மற்றும் கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்களும் இந்த நாளில் வருவது தனிச்சிறப்பு ஆகும். சிவாலயங்களில் உச்சிகால வேளையிலும், மாலை நேரத்திலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
இத்தனை நன்மைகளா?
அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றப்படும் சிவபெருமானுக்கு நடத்தப்படும் இந்த ஐப்பசி அன்னாபிஷேகத்தை பார்ப்பதே மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்றும், கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
சிவபெருமானுக்கு இந்த அன்னாபிஷேகத்தில் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும் அன்னத்தை சாப்பிட்டால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் ஆகும். மேலும் தொழிலில் தொடர் தோல்விகள், சிரமத்தை சந்தித்து வருபவர்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும் என்றும், நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சந்தித்து வருபவர்களுக்கு மன நிம்மதி உண்டாகும் என்றும், வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுபவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிவாலயங்கள் களைகட்டி காணப்படுகிறது. உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அலைமோதும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.