ஆல்ஃப்ஸ் மலை உச்சியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த யூடியூப் பிரபலம்
செல்ஃபி மோகமும், யூடியூப், டிக்டாக் வீடியோ மோகமும் உலகளவில் பல உயிர்களைப் பறித்துவிட்டது.
செல்ஃபி மோகமும், யூடியூப், டிக்டாக் வீடியோ மோகமும் உலகளவில் பல உயிர்களைப் பறித்துவிட்டது. அதில் ஒன்றுதான் யூடியூப் பிரபலம் ஆல்பர்ட் டைர்லண்டின் உயிர்.
இத்தாலியின் ஆல்ஃப்ஸ் மலை உச்சியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார் யூடியூப் பிரபலமான ஆல்பர்ட் டைர்லண்ட். இவரது சொந்த நாடு டென்மார்க். வயது 22. சமூக வலைதளங்களில் இசை வீடியோக்களையும் நகைச்சுவை காட்சிகளையும் பகிர்ந்து உலகளவில் பிரபலமானவர் ஆல்பர்ட்.
அண்மையில் இவர் இத்தாலியின் மவுன்ட் செக்கீடாவில் உள்ள வால் கார்டெனா பகுதியில் வீடியோ ஷூட்டுக்காகச் சென்றிருந்தார். அப்போது ஆல்ஃப்ஸ் மலை உச்சியில் நின்றபடி வீடியோ எடுக்க முயற்சித்தபோது கால் இடறி தவறி விழுந்தார். 656 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த அவரைக் காப்பாற்ற மீட்பு ஹெலிகாப்டர் உடனடியாக விரைந்தது. ஆனால், அதற்குள்ளதாகவே ஆல்பர்ட்டின் உயிர் பிரிந்தது.
இதனை ஆல்பர்ட்டின் தாயார் வைப் ஜோர்கர் உறுதி செய்துள்ளார். TV2, தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், "நாங்கள் எங்களது மகனை இழந்துவிட்டோம். மிகுந்த துன்பத்தில் இருக்கிறோம். அவனது ரசிகர்களுக்கும் இது வருத்தமான செய்தியாகவே இருக்கும். இப்போதைக்கு எங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது" என்று கூறினார்.
ஆல்பர்ட்டின் மறைவை டென்மார்க் நாட்டின் நாளிதழான எக்ஸ்த்ரா ப்ளேடட்டும் உறுதி செய்துள்ளது. ஆல்பர்ட், யூடியூப் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். அதில் அவர் இசை வீடியோக்களைப் பகிர்ந்து வந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்ஸ் உள்ளனர். அண்மையில் அவர் சம்மர் என்றொரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதற்குமுன்னதாக இமோஜி ஃப்ரெண்ட்ஸ் ஃபாரெவர், உல்லா என்ற தலைப்புகளில் வீடியோக்களைப் பகிர்ந்து பிரபலமடைந்தார்.
2018 ஆம் ஆண்டு டீம் ஆல்பர்ட் என்ற நகைச்சுவைப் படத்தில் அவர் நடித்துப் பிரபலமடைந்தார். ஒரு ஹைஸ்கூல் மாணவன் யூடியூப் பிரபலமாக காணும் கனவும் அதற்கான முயற்சியும் தான் அந்தப் படத்தின் கரு.
ஆல்பர்டின் மறைவு நெட்டிசன்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சக யூடியூபரான ராஸ்மஸ் ப்ரோஹேவ், "என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெடித்து அழத் தயாராகிவிட்டேன். வார்த்தைகளால் இந்தத் துயரை விவரிக்க முடியாது.அவர் என்றும் நினைவில் இருப்பார்" என்று கூறியுள்ளார்.
மற்றொருவர், "நாங்கள் டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஆல்பர்ட் டைர்லண்டை இழந்துள்ளோன். அவர் இத்தாலியில் மலை உசியில் ஒரு வீடியோவைப் படம்பிடித்துக் கொண்டிருந்த போது தவறிவிழுந்து இறந்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். வீடியோவுக்காக ரிஸ்க் எடுத்து உயிரைத் துறப்பது எல்லாம் அபத்தமானது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீனாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் உயரமாக க்ரேனில் நின்றபடி வீடியோ எடுக்கும்போது தவறிவிழுந்து உயிரிழந்தார். ஹாங்காங் யூடியூப் பிரபலமான சோபியா சுங் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்தபோது உயிரிழந்தார்.