புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
XEC என்ற புதிய உருமாறிய கொரோனா முதன்முதலில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. பலவீனமாக இருப்பவர்கள், முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸை போட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது.
புதிய கொரோனா வகை:
கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த நிலையில், புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், XEC என்ற புதிய உருமாறிய கொரோனா முதன்முதலில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. பின்னர், இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் மற்றும் பிற நாடுகளுக்கு பரவியுள்ளன. ஒமைக்ரான் கொரோனாவின் திரிபாக XEC உருமாறிய கொரோனா இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த கொரோனாவின் மரபியல் மாற்றம், வரும் இலையுதிர் காலத்தில் தொற்றுநோய் மேலும் பரவ காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், கொரோனா நோயின் தீவிர விளைவுகளை தடுப்பதில் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
பலவீனமாக இருப்பவர்கள், முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸை போட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள மரபியல் நிறுவனத்தின் இயக்குனரும் பேராசிரியருமான ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ், இதுகுறித்து கூறுகையில், "சமீபத்திய உருமாறிய கொரோனாவை விட XEC உருமாறிய கொரோனா குறைவாகவே பரவுகிறது.
தடுப்பூசிகள் தொடர்ந்து வலுவான பாதுகாப்பை வழங்கும். வரும் குளிர்காலத்தில் ஏற்படும் கொரோனா அலையில் XEC ஆதிக்கம் செலுத்தும்" என்றார்.
XEC உருமாறிய கொரோனாவின் அறிகுறிகள்:
- உயர் வெப்பநிலை
- வலி மற்றும் சோர்வு
- இருமல் அல்லது தொண்டை புண்
பெரும்பாலான நபர்கள் சில வாரங்களுக்குள் குணமடைவார்கள். இருப்பினும், சிலருக்கு நீண்டகாலமாக அறிகுறிகள் தொடரலாம்.
சமீபத்தில், BA.2.86 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்தாண்டு ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2,300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்பான 28 நாள்களை ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் 63 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், இறப்பு விகிதம் 56 சதவிகிதம் குறைந்தது.