World Food Safety Day 2022: உணவே மருந்து! சர்வதேச உணவு பாதுகாப்பு நாள் 2022: வரலாறும் முக்கியத்துவமும்!
சர்வதேச உணவு பாதுகாப்பு நாள் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதலின் பேரில் கடைபிடிக்கப்படுகிறது.

உணவு மூலம் பரவும் நோய்களைக் கண்டறிந்து, தடுத்து மனித உடல் நலனை மேம்படுத்த உதவுவதே இந்த நாளை கடைபிடிப்பதில் நோக்கமாக இருக்கிறது.
உலகளவில் ஆண்டுதோறும் 10ல் ஒருவர் உணவால் ஏற்படும் நோய்களுக்கு ஆளாகின்றனர் என்று உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான உணவு உடலுக்கு எப்படி ஆரோக்கியத்தைத் தருகிறதோ அதேபோல் தரமற்ற உணவு உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது. ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அதேபோல் சீரான சத்தான உணவு இல்லாவிட்டால் அது உடல்நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். வளர்ச்சியில் குறைபாடு, நுண் ஊட்டசத்தால் குறைபாடு, தொற்றும் மற்றா தொற்றா நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உணவினால் பரவும் நோய் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் மிக மிக ஆபத்தானது. சர்வதேச உணவு பாதுகாப்பு நாள் என்பது உணவுத் தரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கொண்டாடப்படுகிறது. உணவு உற்பத்தி செய்யப்படுவதில் தொடங்கி பதப்படுத்துதல், சேமித்தல், விநியோகித்தல், தயாரித்தல், புசித்தல் என எல்லா நிலைகளிலும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நாள் கடைபிடிக்கப்படுவதின் நோக்கமாக உள்ளது.
உணவு பாதுகாப்பு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி உணவு பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தீம் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்பு நாளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு கருத்துரு உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'Safer food, better health', பாதுகாப்பான உணவு, மேம்பட்ட ஆரோக்கியம் என்ற கருத்தில் கொண்டாடப்படுகிறது.
உணவு பாதுகாப்பு நாள் 2022: வரலாறும் முக்கியத்துவமும் என்ன?
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச உணவு பாதுகாப்பு நாளை அறிவித்தது. உணவு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த இது ஆரம்பிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா. உறுப்பு அமைப்பான உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து இந்த நாளை கொண்டாடுவது என்று தீர்மானித்து முன்னெடுத்தது. ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்துமே இதற்கு பொறுப்பானதாகவே இருக்கின்றன.
இந்த நாளின் நோக்கம் என்ன?
சர்வதேச உணவு பாதுகாப்பு நாளில், உணவினால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிரச்சாரங்களை பரவலாக முன்னெடுப்பதே முதல் நோக்கமாக உள்ளது. மேலும், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்வதை வலியுறுத்தவும் கொண்டாடப்படுகிறது. உலகளவில் உணவு சார்ந்த நோய்களை கட்டுப்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

