ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்: பள்ளிக்கு எதிராக வழக்கு - நடவடிக்கை எப்படி இருக்கும்?
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அண்மையில் ஆசிரியை ஒருவர் 6 வயது குழந்தையால் சுடப்பட்டார்.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அண்மையில் ஆசிரியை ஒருவர் 6 வயது குழந்தையால் சுடப்பட்டார். அந்தக் குழந்தை சம்பவத்திற்கு முன்னரே பலமுறை எச்சரித்ததாகவும் அந்த எச்சரிக்கை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதனால் தனது க்ளையன்ட் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்வதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியையின் பெயர் அபிகெய்ல் ஸ்வெர்னர். கடந்த ஜனவரி 6ஆம் தேதி காலை ஸ்வெர்னர் பள்ளி நிர்வாகத்திடம் தன்னை ஒரு சிறுவன் மிரட்டுவதாகக் கூறியுள்ளார். மேலும் ஒரு ஆசிரியை அந்த சிறுவனிடம் துப்பாக்கி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார். இன்னொரு ஆசிரியை சிறுவனிடம் துப்பாக்கியை பார்த்ததாகவும் கூறியுள்ளார். இவ்வளவு பேர் சொல்லியும் அந்த பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை என்பதே புகார்.
இந்நிலையில் தான் ஜனவரி 6ஆம் தேதியன்றே சிறுவன் பற்றி புகார்கள் பாய்ந்த சில மணி நேரங்களில் அவன் துப்பாக்கியிலிருந்து ஆசிரியை அபிகெய்ல் ஸ்வெர்னர் நோக்கி தோட்டாவும் பாய்ந்துள்ளது. இதில் அந்த ஆசிரியை படுகாயமும் அடைந்துள்ளார்.
தற்போது அந்த ஆசிரியை வீட்டில் இருந்துபடி தேறிவருகிறார். இந்நிலையில் அவர் வேலை பார்த்த நியூபோர்ட் நியூஸ் ஸ்கூல் நிர்வாக கண்காணிப்பாளர் ஜார்ஜ் பர்க்கர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சிறுவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது என்றாலும் 6 வயது சிறுவன் கையில் துப்பாக்கி கிடைக்கும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். 2020 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு காரணமாக மட்டும் 45,222 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனி நபரின் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். ஒவ்வொரு 100 குடும்பங்களிலும் 121 துப்பாக்கிகள் இருக்கின்றன.
18 வயதுக்கு மேற்பட்டவர்களும் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இளம் வயதினர் மத்தியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி கலாச்சாரத்தால் 4,000 சிறார்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு 5,692 பேராக அதிகரித்துள்ளது. அதில் 1,560 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க மக்கள்தொகையில் பாதி பேர் துப்பாக்கி வன்முறையை பெரும் பிரச்சினையென கருதுகின்றனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று ஆளும் ஜனநாயக கட்சியினர் 91 சதவீதம் பேரும், குடியரசு கட்சியினர் 24 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.