US Vs IND Vs PAK: ஏம்பா.. 2 பேரும் கொஞ்சம் சமாதானமா போய்டுங்க.. இந்தியா, பாகிஸ்தானிடம் பேசிய அமெரிக்கா...
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பேசியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் பிரதமரிடம், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல்
காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய சூப்பாக்கிச் சூட்டில், 26 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதனிடையே, பஹல்காம் தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து, இந்தியா ஆக்ஷனில் இறங்கியது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததோடு, பாகிஸ்தானியர்களை வெளியேறச் சொன்னது உள்பட, பல அதிரடியான பதிலடிகளை அரங்கேற்றியது இந்தியா. இதையடுத்து, பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தியது உள்ளிட்ட பல எதிர்வினைகளை ஆற்றியது.
இதைத் தொடர்ந்து, இருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டிய பிரதமர் மோடி, நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த, முப்படைகளுக்கும் அவர் முழு சுதந்திரம் அளித்ததாகவும், எங்கு, எப்போது, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை, ராணுவமே முடிவு செய்யயும் பிரதமர் அனுமதி அளித்தார்.
மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவையும் மாற்றியமைத்து, அமைச்சரவை உத்தரவிட்டது. இதனால், பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உருவானது. இதனிடையே, இந்தியா 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் உளவுத்துறையும் அந்நாட்டு அரசை எச்சரித்ததாக தகவல் வெளியானது.
இரு நாடுகளும் சமரசம் செய்யுமாறு வலியுறுத்திய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்
இந்தியா - பாகிஸ்தான் இடையே இப்படிப்பட்ட பதற்றமான சூழல் நிலவும் வேளையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் பிரதமரிடம், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று இரவு பேசியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய அவர், பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்ததற்காக தனது வருத்தத்தை தெரிவித்தை தெரிவித்துள்ளார். அதோடு, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதை மீண்டும் உறுதிப்படுததியுள்ளார் ரூபியோ. மேலும், பாகிஸ்தானுடன் இணைந்து பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து, தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபிடம் பேசிய ரூபியோ, ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த மனசாட்சியற்ற தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், நேரடி தகவல் தொர்புகளை மீண்டும் நிறுவுமாறும், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி, தெற்காசியாவில் விரைந்து அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் பேச்சு எடுபடுமா அல்லது இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப் போகிறதா.? பொறுத்திருந்து பார்ப்போம்.





















