அமெரிக்க விமான சேவை முடக்கத்திற்கு காரணம் அரசு அதிகாரியா..? மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிர்ச்சி தகவல்..!
அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு நேற்று முன்தினம் விமான சேவை முடங்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விதமான விமான சேவையும் பாதிக்கப்பட்டதாக என்பிசி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விமான சேவை முடக்கத்திற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு என சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தை இயக்குவதற்கு தேவைப்படும் தகவல்களை அடையாளம் தெரியாத அரசு அதிகாரி ஒருவர் சேதப்படுத்தியதாகவும் இதனால் விமான போக்குவரத்து நிர்வாகத்தின் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது, விமானங்கள் முறையாக இயக்கப்படுவதாகவும் விமானங்கள் ரத்து செய்யப்படும் விகிதம் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களை இயக்கும்போது நடுவானில் பறவைகள் வரும்போதும் விடப்படும் எச்சரிக்கை உள்பட விமான நிலையங்களில் ஏற்படும் சிக்கலான பாதுகாப்பு சூழல்களின்போது விமானிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்த வழிகாட்டுதல்களை வழங்கும் அமைப்பின் பெயரே Notam ஆகும்.
இதில்தான், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த மாதிரயான தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முயற்சி செய்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம், கிழக்கு அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணி வரை 760 விமானங்களின் இயக்கம் தாமதம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 91 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
All flights across the US have been grounded due to a glitch with the Federal Aviation Administration's computer system, US media reports pic.twitter.com/CAIGNY94NW
— ANI (@ANI) January 11, 2023
ஹவாய் முதல் வாஷிங்டன் வரை அமெரிக்கா முழுவதும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்தும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்தும் சமூக ஊடகங்களில் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சமீப காலமாக, இந்தியாவில் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு ஜூலை மாதமே இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுருந்தது.