Ukraine Defence Minister: போருக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - உக்ரைன் அதிபர் அதிரடி, ரஷ்யாவிற்கு சாதகமா?
ரஷ்யா உடனான போருக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சரை நீக்கி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
![Ukraine Defence Minister: போருக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - உக்ரைன் அதிபர் அதிரடி, ரஷ்யாவிற்கு சாதகமா? Ukraine president Zelenskyy moves to replace Oleksii Reznikov in defence shake-up Ukraine Defence Minister: போருக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - உக்ரைன் அதிபர் அதிரடி, ரஷ்யாவிற்கு சாதகமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/cebac73c33e0dce9ad5c88d2265969881683193976626653_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஷ்யா உடனான போருக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சரை நீக்கி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கி அறிவிப்பு:
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 19வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ்வை பதவியில் இருந்து நீக்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். போர் நடைபெறும் சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஊழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?
பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் 550 நாட்களுக்கும் மேலாக முழு அளவிலான போரை அனுபவித்துள்ளார். அமைச்சகத்திற்கு இராணுவம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்துடன் புதிய அணுகுமுறைகள் மற்றும் பிற தொடர்பு வடிவங்கள் தேவை என்று நான் நம்புகிறேன். எனவே உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு தனியார்மயமாக்கல் நிதியத்தின் தலைவரான ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை பரிந்துரை செய்துள்ளேன். இதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
ஒலெக்சி ரெஸ்னிகோவ்:
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சராக ரெஸ்னிகோவ் நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா உடனான போருக்காக மேற்கத்திய ராணுவத்திடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் பெற உதவினார். மேற்கத்திய நாடுகளிடமிருந்து உக்ரைன் நாட்டிற்கு தேவையான ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியிலான பெறுவதிலும் முக்கிய பங்கு வகித்தார். அதேநேரம், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் பாதுகாப்பு அமைச்சகம் விமர்சனங்களுக்காளானது.
யார் இந்த ரஸ்டம் உமெரோவ்:
41 வயதான முன்னாள் சட்டமியற்றுபவர் மற்றும் கிரிமியன் டாடரான உமெரோவ் செப்டம்பர் 2022 முதல் தனியார்மயமாக்கல் நிதியத்தின் தலைவரான செயல்பட்டு வருகிறார். கருங்கடல் தானிய ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான போர்க்கால பேச்சுவார்த்தைகளில் இவர் பங்குபெற்றுள்ளார். அவர் உக்ரைனில் அரசு சொத்து நிதியத்தில் அவரது சாதனைக்காக பாராட்டப்படுகிறார். இது அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குவதை மேற்பார்வையிடுகிறது மற்றும் அவர் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த அமைப்பு ஊழல் புகார்களால் விமர்சனத்திற்காளானது. தற்போது அது சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிற்கு சாதகமா?
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவும் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், உக்ரைனுக்கு F-16 ஜெட் விமானங்கள் போன்ற தளவாடங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)