Flights Cancelled: துபாயில் கனமழையால் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு; விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்
Dubai Heavy Rain: துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பெய்த வரலாறு காணாத மழையால் விமான போக்குவரத்து 2வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை:
மத்திய கிழக்கு நாடுகளில் சில தினங்களுக்கு முன்பு ( ஏப்ரல் 16 ) கனமழை பெய்தது. சில பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 254 மிமீ மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது எனவும், இந்த மழையானது 1949 ஆண்டுக்கு பிறகு பெய்த மழையில், இதுவே அதிகபட்சமாக பதிவாகியுள்ளது எனவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. இதனால், துபாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சாலைகள் ஆறு போல காட்சியை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
விமான போக்குவரத்து ரத்து:
மத்திய கிழக்கு நாடுகளில் அமோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலை முதல் துபாய், சார்ஜா, குவைத் பகுதிகளுக்கு செல்லும் 5 விமானங்கள், அதேபோல் மேற்கண்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்கள் என மொத்தம் 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக துபாய், குவைத், சார்ஜா ஆகிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அபுதாபி, சார்ஜா, மற்றும் துபாய்க்கு இயக்கப்படும் ஒரு சில விமானங்களும் பலமணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதனால் துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.