Turkey Syria Earthquake: மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்; சீட்டுக்கட்டு போல் சரியும் குடியிருப்புகள்; உயரும் பலி எண்ணிக்கை..?
துருக்கி மற்றும் சிரியா பகுதியில் இந்திய நேரப்படி மாலை 04.06 மணி அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா பகுதியில் இந்திய நேரப்படி மாலை 04.06 மணி அளவில் மிகவும் சக்திவாய்ந்த இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.
இன்று (06/02/2023) சிரியா எல்லைக்கு அருகாமையில் தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் குறைந்தது 1,300 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் அரசு ஊடகம் சார்பில் 912 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,380 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலாத்யா மாகாணத்தில் குறைந்தது 130 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, அதே சமயம் தியர்பாகிரில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
நில நடுக்கத்தின் வடமேற்கே 460 கிமீ தொலைவில் உள்ள துருக்கியின் தலைநகரான அங்காராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, துருக்கிய அதிகாரிகள் சர்வதேச உதவியைக் கோரும் "நிலை 4 அலாரத்தை" (level 4 alarm) அறிவித்துள்ளனர்.
வடக்கு சிரியாவில், குறைந்தது 326 பேர் இறந்துள்ளனர் மற்றும் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலெப்போவில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நடுக்கம் லெபனான் மற்றும் சைப்ரஸ் போன்ற தொலைதூரத்தில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு "தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன" என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கிக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். . "துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடமைச் சேதங்களால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். துருக்கி மக்களுக்கு இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது, இந்த துயரத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. ,” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிகப்பட்ட பெண் ஒருவர் கூறியதாவது, "நாங்கள் தொட்டில் போல் அசைந்தோம். வீட்டில் நாங்கள் ஒன்பது பேர் இருந்தோம். என்னுடைய இரண்டு மகன்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கிறார்கள், அவர்களுக்காக நான் காத்திருக்கிறேன்," தியார்பாகிரில் ஏழு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் மீட்கப்பட்ட பெண், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மீட்பு பணிகளில் ஈடுபட இரண்டு பேரிடர் மீட்புக் குழு துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.