US Tariff Vs India: ஓ.. நீங்க அப்படி வரீங்களா.?! இந்தியாவிற்கு வரியை 15%-ஆக குறைக்க அமெரிக்கா போடும் கன்டிஷன்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காதீர்கள் என்று நேரடியாக சொல்லியும், அபராக வரி விதித்தும் இந்தியா கேட்காததால், தற்போது அந்த வரிகளை வைத்து அதை டீல் செய்ய நினைக்கிறது அமெரிக்கா. என்ன நடந்தது.? பார்க்கலாம்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் கோபத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரியை அதிரடியாக 50 சதவீதமாக உயர்த்தினார். ஆனாலும், இந்தியா வளைந்து கொடுக்காத நிலையில், தற்போது அந்த வரிகளை வைத்தே ஒரு திட்டத்தை போட்டுள்ளார் ட்ரம்ப். அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி
இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், அவரது அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிப்பதாக, கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி அறிவித்து அதிர்ச்சி அளித்தார்..
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வரி விதிப்பை ஜூலை 9-ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். மேலும், இந்த கால அவகாசத்திற்குள், வரி விதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும், பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்த கால அவகாசம் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த ஜூலை மாத இறுதிகயில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதை இந்தியா நிறுத்தாவிட்டால், அதற்காக அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
ஆனால், இந்தியா அதற்கு மறுத்துவிட்டதால், ஏற்கனவே விதித்த 25 சதவீத வரிகளுடன், அபராதமாக 25 சதவீத வரி விதித்து, இந்தியாவிற்கான மொத்த வரி 50 சதவீதம் என அறிவித்தது அமெரிக்கா. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி, குறிப்பாக ஆடைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனாலும், தேசிய நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் எனவும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலயே இந்தியா செயல்படுகிறது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
வரிகளை குறைக்க கன்டிஷன் போடும் அமெரிக்கா
இந்த நிலையில், தற்போது இந்தியாவை பணிய வைக்க வேறு ஒரு வழியை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்கா. அதாவது, வரிகளை ஏற்றிக்கொண்டே செல்வதை விட, அதை குறைக்கிறோம் என்று கூறி, அதற்கு கன்டிஷனை போட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும் 50 சதவீத வரிகை, 15 சதவீதம் வரை குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு கன்டிஷனாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா சீராக குறைத்துக் கொள்ள வேண்டும் என கூற இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கு இந்தியா சம்மதிக்கும் பட்சத்தில், விரைவில் ட்ரம்ப்-மோடி பேச்சுவார்த்தை நடைபெற்று, இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நிபந்தனையை இந்தியா ஏற்குமா.? அல்லது ரஷ்யாவின் உறவை முறிக்க முடியாது என மீண்டும் கூறுமா.? பிரதமர் மோடியின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















